பொன்னேரி,--பொன்னேரி அடுத்த, வேண்பாக்கம் ரயில் நிலைய சாலையைச் சேர்ந்தவர் ராமசாமி, 70; மளிகை வியாபாரி. இவரது வீட்டின் கீழ்தளத்தினை வாடகைக்கு விட்டுள்ளார். முதல்தளத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
வாடகைக்கு வசிப்பவர் குடும்பத்தினருடன் ஊருக்கு சென்றிருந்தபோது, நேற்று முன்தினம் நள்ளிரவு, கீழ்தளத்தில் சத்தம் கேட்டு ராமசாமி கீழே வந்தார். அப்போது மர்ம நபர்கள் கீழ்வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருப்பதை கண்டார்.
ராமசாமி வருவதைக் கண்ட திருடர்கள், அவரை இரும்பு ராடால் தலையில் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பினர்.
அருகில் வசிப்பவர்களின் உதவியுடன் ராமசாமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.