திருப்பூர்:பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு கணக்குகளை அதிகரிக்கும் வகையில், பிப்., 9 மற்றும் 10 ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.
தபால் துறை சார்பில், 'அம்ரிட் பெக்ஸ் பிளஸ்' என்ற திட்டம் வரும் பிப்., 11ம் தேதி நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதை முன்னிட்டு, பிப்., 9, 10ம் தேதி பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு கணக்குகளை அதிகளவில் துவங்க கல்வித்துறை, சுகாதாரத்துறை, அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து தபால்துறை மூலம் சிறப்பு முகாம்களை நடத்த தபால்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ், 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தை பெயரில் தாய் அல்லது தந்தை மூலம் செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கை துவங்கி முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்சம் 250 ரூபாய் செலுத்தி, இத்திட்டத்தில் சேரலாம். அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இதற்கு, 7.6 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருப்பூர் தபால் கோட்டத்தின் கீழ் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது.
எனவே, அனைவரும் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் சேமிப்பு கணக்குகளை துவங்கி பயன்பெறலாம் என, திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜய தனசேகர் தெரிவித்துள்ளார்.