ஆர்.கே.பேட்டை,-ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் கிராமத்தின் தென்கிழக்கு பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம், அரசு தொடக்கப் பள்ளி என ஒருங்கிணைந்த வளாகத்தில் அமைந்துள்ளன.
ஆர்.கே.பேட்டை செல்லும் சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த வளாகத்தின் சுற்றுச்சுவரை ஒட்டி, மின் மாற்றி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த மின் மாற்றியின் அருகே உள்ள நிழற்குடையில் காத்திருந்து, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்து பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், இந்த மின் மாற்றியை சுற்றிலும், குறுமரங்கள் வளர்ந்துள்ளன. இதனால், மின் விபத்து அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. மேலும், சாலையோரம் நடந்து செல்பவர்கள் எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கவும், இந்த மரங்கள் இடையூறாக உள்ளன. மின் மாற்றியை சுற்றிலும் உள்ள குறுமரங்கள் உள்ளிட்ட புதரை அகற்றி, சுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.