பல்லடம்:பல்லடம் அடுத்த கரடிவாவியில், எஸ்.எல்.என்.எம்., அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இங்கு, சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளியில், அடிப் படை வசதிகள் குறைபாடு உள்ளதாக, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தாசில்தார், மற்றும் பி.டி.ஓ.,விடம் புகார் அளித்துள்ளனர்.
அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:
பல்லடம் வட்டாரத்தில் பழமையான பள்ளியாக உள்ள எஸ்.எல்.என்.எம்., பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலர் அரசு அதிகாரிகளாகவும், பல்வேறு துறைகளிலும் உள்ளனர். இன்றும், இப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், மாணவர்களுக்கு உண்டான அடிப்படை வசதிகளில் இப்பள்ளி மிகவும் பின்தங்கி உள்ளது.
மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் மைதானம் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் கழிப்பிட வசதி போதுமானதாக இல்லை. தற்போது உள்ள கழிப்பிடமும் பராமரிப்பின்றி சிதலமடைந்துள்ளது.
வகுப்பறைகளில் மாணவர்கள் பயன்படுத்தும் டெஸ்க், பெஞ்ச் உள்ளிட்டவை பழுதடைந்துள்ளன. சுற்றுப்புற நல்லொழுக்கம், பராமரிப்பு போன்ற விருதுகளை வாங்கிய இப்பள்ளியின் அவல நிலை கண்டு வருந்துகிறோம். இதனால், மாணவர் சேர்க்கை குறையும். இவ்வாறு, அதில் கூறியுள்ளனர்.