திருவாலங்காடு--திருவாலங்காடு போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில், 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு தொழுதாவூர் சுடுகாடு அருகே, சின்னம்மாபேட்டை தாங்கல் ஏரி, சின்னமண்டலி நிரஞ்சீஸ்வரர் கோவில், மணவூர் ரயில் நிலையம் அருகே, மருதவல்லிபுரம், ராஜபத்மாபுரம் ஆல மரம் என, பல்வேறு கிராமங்களில் சர்வ சாதாரணமாக சூதாட்டம் நடந்து வருகின்றன.
மேலும், தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள் தொழிலுக்கு செல்லாமல் சூதாடி வருகின்றனர். இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என, சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர்.
இரவு, பகலில் கிராமப்புறங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடாததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பலரும் சூதாட்டங்களை வெளி வட்டத்தில் நடத்தி இளைஞர்களை திசை திருப்பி வருகின்றனர்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீபாஸ் கல்யாண் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் கூறுகையில், 'சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.