ஆர்.கே.பேட்டை,--ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு சுற்றுப் பகுதியில் கரும்பு சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு முறை நடவு செய்யப்படும் கரும்பு, அடுத்தடுத்து மூன்று முறை வெட்டப்படுகிறது.
ஒரு முறை அறுவடை முடிந்ததும், அந்த தோட்டத்தில் உதிர்ந்துள்ள முதிர்ந்த தோகைகளை தீ வைத்து எரிக்க வேண்டும்.
தோகையை எரிக்கும் போது, அருகில் உள்ள தோட்டங்களுக்கு தீ பரவாதபடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பது விவசாயிகளின் திறமை.
இதற்காக, தோகை எரிக்கப்படும், அதே நேரத்தில், நீர் பாசனமும் நடக்கும். இதன் வாயிலாக தீ கட்டுப்பாட்டில் வைக்கப்படுகிறது.
தீ வைத்து எரிக்கப்பட்ட பின், கரும்பு வேர் பகுதியில் இருந்து அடுத்த பருவத்திற்கான புதிய துளிர்கள் தோன்றும். இதன் வாயிலாக, விதை கரும்பு, நடவு பணி உள்ளிட்டவை சிக்கனமாக நடக்கிறது. அதாவது ஒரு முறை நடவு, மூன்று முறை அறுவடை என்பது கரும்பு சாகுபடியில் சிறப்பு.
மொத்தத்தில் எளிதில் தீ விபத்தில் சிக்கும் தன்மை கொண்ட கரும்பு தோட்டங்களை விவசாயிகள் தீவிரமாக கண்காணித்து வளர்க்கின்றனர். விவசாயிகளின் தீவிர கண்காணிப்பால் மட்டுமே இனிக்கும் கரும்பு விளைகிறது என்றால் அது மிகை அல்ல.