மீஞ்சூர்,---கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள வல்லுார் அணைக்கட்டு பகுதியில் ஆங்காங்கே ஓட்டைகள் ஏற்பட்டு, தேங்கியுள்ள தண்ணீர் சிறிது சிறிதாக வெளியேறி வருவதால், கோடைக்கு முன் வறண்டுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த, சீமாவரம் பகுதியில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே வல்லுார் அணைக்கட்டு அமைந்துள்ளது.
இது, 1872ல் கட்டப்பட்டதாகம். மழைக்காலங்களில் அணைக்கட்டில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுவதன் வாயிலாக, அருகில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது.
மீஞ்சூரை சுற்றியுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அணைக்கட்டு பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
11 ஆயிரம் கன அடி நீர்
கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழை மற்றும் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரால், கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் வல்லுார் அணைக்கட்டு நிரம்பி வழிந்தது.
அதிகபட்சமாக, 11 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி, எண்ணுார் முகத்துவாரம் வழியாக வங்காள விரிகுடா கடலில் சென்று கலந்தது.
அதன் பின் மழை பொழிவும், ஆற்றில் நீர்வரத்தும் குறைந்தது. இதனால் படிப்படியாக அணைக்கட்டில் உபரி நீர் வெளியேறுவதும் குறைந்தது.
தற்போது உபரி நீர் வெளியேறாத நிலையில், அணைக்கட்டில், 0.2 டி.எம்.சி., தண்ணீர் தேங்கி உள்ளது.
இந்நிலையில், அணைக்கட்டு பகுதியில் ஆங்காங்கே சிறு சிறு ஓட்டைகள் ஏற்பட்டு, அதன் வழியாக தேங்கியுள்ள தண்ணீர் வெளியேறியபடி உள்ளது.
நாள் முழுதும் தண்ணீர் வெளியேறி வீணாகி வருவதால், தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர் இருப்பு படிப்படியாக குறையும் நிலை உள்ளது.
பருவ மழைக்கு முன், பல லட்சம் ரூபாய் செலவிட்டு, அணைக்கட்டு பகுதி சீரமைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது ஓட்டைகள் வழியாக தேங்கிய தண்ணீர் வெளியேறி வருகிறது.
உடனடியாக பொதுப்பணித் துறையினர் அணைக்கட்டு பகுதியை பார்வையிட்டு, தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
150 ஆண்டுகள் பழமை
இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததாவது:
வழக்கமாக, ஜூன், ஜூலை மாதங்களில் அணைக்கட்டு வறண்டு போகும் நிலையில், தற்போது ஓட்டைகள் வழியாக தண்ணீர் வெளியேறி வருவதால், கோடைக்கு முன்பே வறண்டுவிடும் நிலை உருவாகி உள்ளது. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த வல்லுார் அணைக்கட்டினை பராமரிப்பதில் பொதுப்பணித் துறையினர் அலட்சியம் காட்டுகின்றனர்.
அணைக்கட்டு பகுதிகளை கண் துடைப்பிற்காக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல், உரிய முறையில் பராமரித்து தேங்கியுள்ள தண்ணீரை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
அணைக்கட்டில் நீர் வழிந்தபடி இருந்ததால், ஓட்டைகள் இருப்பது தெரியவில்லை. தற்போதுதான் தெரிய வருகிறது. உடனடியாக அதை சீரமைத்து, தண்ணீர் வெளியேறுவது முற்றிலும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.