ஸ்ரீபெரும்புதுார்--காட்டரம்பாக்கம் பகுதியில் வாகன 'சைலன்ஸர்'களுக்கு ரசாயன கலவை பூசும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் இரவுப்பணியில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அதிகாலை 2:00 மணியளவில், அதிக வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக ரசாயன கலவையை பீய்ச்சி அடிக்கும் 'பாய்லர்' வெடித்துச் சிதறி தீப்பற்றியது.
இதனால், ஊழியர்கள் தொழிற்சாலையில் இருந்து வெளியேறினர். இருங்காட்டுக்கோட்டை தீயணப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
மேலும், பலத்த தீக்காயமடைந்த காட்டரம்பாக்கத்தைச் சேர்ந்த மதன்குமார், 26. திருவள்ளூரைச் சேர்ந்த சேனாதிபதி, 36, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷ், 19, புத்துராஜ், 26, ரஞ்சித், 26, ஆகிய ஐந்து ஊழியர்களை மீட்டு சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தொழிற்சாலை நிர்வாகிகள் நான்கு பேரிடம் சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.