கோவை;கோவையில், 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், 31 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கோவையில் ரோட்டோர கடைகள் புற்றீசல்கள் போல் முளைத்துள்ளன. ரோட்டோரங்கள், பூங்காக்கள், நடைபாதைகளை ஆக்கிரமித்து நடத்தப்படும் இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுகள் சுகாதாரமற்ற முறையில் உள்ளன.
இதுகுறித்த செய்தி 'தினமலர்' நாளிதழில் கடந்த, 9ம் தேதி வெளியானது. இதையடுத்துமாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டன.
இக்குழுவினர் கடந்த, 10 முதல், 13ம் தேதி வரை கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ரோட்டோர உணவகங்கள், தள்ளுவண்டி கடைகள் என, 278 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், உணவு பாதுகாப்பு துறை உரிமம், பதிவு சான்றிதழ் பெறாமல், 95 கடைகள் செயல்படுவது தெரிந்தது.
ஆய்வில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி சூடான உணவு பொருட்களை பார்சல் செய்த, 31 கடைகளுக்கு, தலா, ரூ. 2,000 என, மொத்தம் ரூ.62 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ரூ.9,620 மதிப்பிலான, 44 கிலோ பழைய மற்றும் கலர் சேர்க்கப்பட்ட உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
தொடர்ந்து, உணவு பாதுகாப்பு, தரநிர்ணயச் சட்டம், 2006 பிரிவு 55-ன் கீழ், நோட்டீஸ் வழங்கப்பட்டது.
'லைசன்ஸ் அவசியம்'
அதிகாரிகள் கூறுகையில், 'அனைத்து உணவு நிறுவனங்களும் உணவு பாதுகாப்பு துறையின் பதிவுசான்று, உரிமம் கண்டிப்பாக பெற வேண்டும். சூடான உணவுப் பொருட்களை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் பார்சல் செய்ய கூடாது.
பழைய மற்றும் கெட்டுபோன உணவுப் பொருட்களை விற்பனை செய்ய கூடாது. உணவு பொருட்களில் செயற்கை வண்ணம் சேர்க்கக்கூடாது. வாடிக்கையாளர்கள் அருந்துவதற்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும்' என்றனர்.