'இதற்கு முன் இவர், இவ்வளவு உற்சாகமாக இருந்தது இல்லையே...' என, புதுடில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பற்றி ஆச்சரியத்துடன் பேசுகின்றனர், இங்குள்ள சக அரசியல்வாதிகள்.
கெஜ்ரிவாலின் இந்த திடீர் உற்சாகத்துக்கு, முக்கியமான காரணம் இருப்பதாக கூறுகின்றனர், அவரது கட்சி நிர்வாகிகள். அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணியின் நரேந்திர மோடிக்கு போட்டியாக, எதிர்க்கட்சிகள் சார்பில், பிரதமர் வேட்பாளராக யாரை நிறுத்தினால் சரியாக இருக்கும் என, சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டதாக கூறுகின்றனர், ஆம் ஆத்மி கட்சியினர்.
இந்த ஆய்வில், காங்கிரஸ் எம்.பி., ராகுலை விட, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தான், அதிக ஆதரவு இருப்பதாக கூறப்பட்டு உள்ளதாம். அந்த விபரம் தெரியவந்த பின்தான், கெஜ்ரிவாலுக்கு மகிழ்ச்சி அதிகரித்து விட்டது என்கின்றனர்.
'அதெல்லாம் சரி; யார் இந்த ஆய்வை நடத்தியது...' என, அவர்களிடம் கேட்டால், 'அது பற்றி தெரியாது. ஆனால், இப்போதைக்கு மோடிக்கு சரியான போட்டி கெஜ்ரிவால் தான்...' என்கின்றனர்.
இந்த தகவல் அறிந்த, காங்., கட்சியினர் கடும் கோபத்தில் உள்ளனர். 'இரண்டு மாநிலங்களில் ஆட்சி அமைத்து விட்டதால், பிரதமராகி விடலாம் என, தப்புக் கணக்கு போடுகிறார் கெஜ்ரிவால். அதனால் தான் ஆய்வு, கருத்துக்கணிப்பு என, அவரது கட்சியினர் பொய்யை அள்ளி விடுகிறார்கள்...' என, ஆவேசப்படுகின்றனர்.
'விஷப்பரீட்சை தேவையா?'
'டம்மி தலைவர் இல்லை என்பதை நிரூபித்துக்
காட்ட முடிவு செய்து விட்டார் போலிருக்கிறது...' என, காங்கிரஸ் தலைவர்
மல்லிகார்ஜுன கார்கே பற்றி கூறுகின்றனர், பீஹார் மாநில அரசியல்வாதிகள்.
இங்கு,
முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணியில், காங்கிரசும் அங்கம்
வகிக்கிறது. ஆனாலும், இங்கு காங்கிரசுக்கு பெரிய செல்வாக்கு இல்லை.
ராஷ்ட்ரீய
ஜனதா தளம், பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு அடுத்தபடியாகவே,
இங்கு காங்கிரஸ் உள்ளது. கடைசியாக, 1990ல் தான், காங்கிரஸ் தலைமையிலான
ஆட்சி இங்கு நடந்தது. ஜெகன்னாத் மிஸ்ரா முதல்வராக இருந்தார்.
இதற்கு
பின் பல தேர்தல்கள் நடந்தாலும், காங்கிரசால் ஆட்சியை பிடிக்கவே
முடியவில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி
யுள்ளார், கட்சியின் தற்போதைய தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
இதற்காக,
பீஹார் மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். யாத்திரையின் முடிவில்,
காங்கிரஸ் எம்.பி., ராகுலை அழைத்து வந்து பேச வைக்கவும் திட்டமிட்டு
உள்ளார். 'வரும் லோக்சபா தேர்தலில், பீஹாரில் காங்கிரசுக்கு கணிசமான
இடங்களை பெற்றுத் தந்து விட்டால், கட்சியில் என் செல்வாக்கு அதிகரித்து
விடும்...' என, தன் ஆதரவாளர்களிடம் கூறி வருகிறார், கார்கே.
இதைக்
கேள்விப்பட்ட பீஹார் மாநில அரசியல்வாதிகளோ, 'யாத்திரை நடத்துவதற்கு
இவருக்கு வேறு மாநிலம் கிடைக்கவில்லையா; இங்கு காங்., ஆட்சி அமைத்து, 30
ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இனிமேல் இழந்த செல்வாக்கை மீட்க முடியுமா;
கார்கேவுக்கு இந்த விஷப்பரீட்சை தேவையா...' என, கிண்டலடிக்கின்றனர்.