மனித வாழ்க்கையில் சொந்தமாக வீடு வாங்குவதும், நிலம் வாங்கி தங்கள் விருப்பப்படி வீடு கட்டுவதும் ஒவ்வொரு மனிதனின் லட்சிய கனவாகும். இதில் அரசு மட்டுமின்றி தனியாரில் பணியாற்றுபர்களும் வங்கிக் கடன் மூலம் வீடு கட்ட திட்டமிடுகின்றனர். இது போல் கடைகள் கட்ட நினைப்பவர்களும்
இதற்காக தாங்கள் வசிக்கும் பகுதியின் உள்ளாட்சி அமைப்பு மூலம், பிளான் அப்ரூவல் பெற்று அதன் பின் வங்கி கடன் விண்ணப்பித்து நிதியுதவி பெற்ற பின் தான் வீடு கட்ட முடியும் என்ற சூழ்நிலை உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு வரை நேரடியாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளை சந்தித்து முறையாக விண்ணப்பித்து நீண்ட நாட்கள் காத்திருக்கும் நிலையும், உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதில் பல்வேறு சிரமங்களையும் மக்கள் சந்தித்து வந்தனர்.
ஆனால், தற்போதைய நவீன அறிவியல் உலகில் அரசின் பல்வேறு துறைகளில் சான்றிதழ்கள் பெறுவதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை செயல்பாட்டில் உள்ளது. இருந்தாலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை நேரில் சந்தித்தால் தான் வேலையே நடக்கிறது. இதில் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் மட்டுமின்றி கிராமப்புறம் மக்களும் படும் சிரமம் மிகவும் அதிகம்.
தற்போதைய சூழலில் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 5 நகராட்சி, 11 ஊராட்சி ஒன்றியங்கள், 9 பேரூராட்சிகளில் ஏராளமானோர் பிளான் அப்ரூவலுக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். ஆனால், என்ன காரணத்தாலோ பிளான் அப்ரூவல் கிடைப்பதில் மிகவும் காலதாமதம் ஏற்படுகிறது.
இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு சில தனிநபர்களும், அரசியல் பிரமுகர்களும் விண்ணப்பதாருக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கும் இடையே புரோக்கர் போல் செயல்பட்டு பல்வேறு 'கவனிப்பு'களுக்கு பிறகே பிளான் அப்ரூவல் பெற்று தருகின்றனர். இதனால் உரிய நேரத்தில் வங்கி கடன் பெற முடியாமலும், பணம் இருந்து வீடுகள் கட்ட முடியாமலும், காலதாமதம் ஏற்பட்டு வருவதால் கட்டுமான பொருட்கள் விலை அதிகரித்து, பலர் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் தேங்கி கிடக்கும் பிளான் அப்ரூவல் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுத்து, உடனடியாக அனுமதி வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்த வேண்டும்.
இது தொடர்பாக வாரம் ஒரு முறை ஆய்வு கூட்டம் நடத்தி, காலதாமதமின்றி பிளான் அப்ரூவல் வழங்கப்படுகிறதா என்பதை கலெக்டர் உறுதிப்படுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.