வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்...... .
என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'சமஸ்கிருதமானது, அந்தணர்களுக்கு மட்டுமே உரிய மொழி. அவர்கள் மட்டுமே பயன்படுத்தும் மொழி' என்ற தவறான கருத்தை, திராவிட செம்மல்கள் இதுநாள் வரை பரப்பி வந்துள்ளனர். தமிழ் மொழி போல, சமஸ்கிருதமும் காலம் கடந்து நிற்கும் தொன்மையான மொழி என்பதை, சுலபமாக மறந்து விட்டனர், இந்த அறிவுஜீவிகள்.
![]()
|
ராமாயணத்தை, சமஸ்கிருத மொழியில் எழுதிய, வால்மீகி முனிவர் அந்தணர் அல்ல. இரண்டாம் சந்திரகுப்தர் என்ற, போஜராஜன் அவையில் இருந்த, மகாகவி காளிதாசர், பிறப்பால் ஆடுகள் மேய்க்கும், இடையர் குலத்தைச் சேர்ந்தவர்.
ஆனாலும், காளியின் அருளால் காவியங்கள் படைக்கும் திறமை பெற்று, சமஸ்கிருத மொழியில் நிறைய காவியங்கள் படைத்து, கவிச் சக்கரவர்த்தியானார்.
மகாபாரதம் என்ற புகழ் பெற்ற இதிகாசத்தை, சமஸ்கிருத மொழியில் படைத்த வியாசர், மீனவப் பெண்ணுக்கு மகனாகப் பிறந்தவர். காயத்ரி மந்திரம் சொன்ன, விஸ்வாமித்திரர், வசிஷ்டர் என்ற, அந்தணர் வாயால், 'பிரம்ம ரிஷி' பட்டம் பெற்றவர். சத்திரிய குலத்தில் அவதரித்த இவரும் அந்தணர் அல்ல.
ராமாயணத்தை எழுதி, 'கவிச்சக்கரவர்த்தி' என்று போற்றப்பட்ட கம்பர், சமஸ்கிருத மொழியை நன்கு கற்றதால் தான், சமஸ்கிருதத்தில் வால்மீகி எழுதிய ராமாயணத்தை, தமிழில் மொழி பெயர்த்து, பெரிய சாதனை படைத்தார். தமிழை வளர்த்த அகத்தியரும், சமஸ்கிருத புலமை பெற்றிருந்ததால் தான், சூரியனை போற்றும், 'ஆதித்திய ஹிருதயம்' என்ற பாடலை பாடி, பெருமை அடைந்தார்.
இன்று, அந்தணர் குலத்தில் பிறக்காத மாணவர்கள் பலர், பள்ளிப் படிப்பில் இரண்டாவது மொழியாக சமஸ்கிருதம் கற்று, அதிக மதிப்பெண் பெறுகின்றனர். சாஸ்திரங்கள், வேதங்கள், உபநிடதங்கள் சமஸ்கிருதத்தில் தானே இருக்கின்றன.
![]()
|
நம் நாட்டின் தேசிய மொழியான, ஹிந்தி மொழியே சமஸ்கிருத மொழியிலிருந்து உருவானது தானே. இத்தனை சிறப்புக்கள் உள்ள சமஸ்கிருத மொழியை, 'தேவபாஷை, அந்தணர்களுக்கே உரிய மொழி' என்று, ஒரு தவறான பிம்பத்தை உருவாக்கி, அதில் குளிர் காய நினைக்கின்றனர், திராவிட செம்மல்கள்.
அத்துடன், சாஸ்திரங்கள், வேதங்கள், சம்பிரதாயங்கள் எல்லாம், மூடநம்பிக்கைகள் என்றும் சொல்லி, அப்பாவி தமிழர்களின் காதுகளில் பூச்சூடுகின்றனர். சமஸ்கிருதத்தை ஆதரிக்கும் அந்தணர்கள், தமிழ் மொழியை வெறுப்பது இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. இதுவே, அந்தணர்களுக்கும், திராவிட செம்மல்களுக்கும் உள்ள வித்தியாசம்!
Advertisement