வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை- ''தமிழகத்திற்கு தேவை இல்லாத ஆணி இருக்கிறது என்றால், அது அறநிலைய துறை தான்; கோவில்களில் இருந்து அரசு வெளியே வர வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
![]()
|
தமிழக பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவு சார்பில், ஹிந்து சமய அறநிலைய துறையை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், நேற்று காலை முதல் மாலை வரை உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
ஆட்சேபனை
அதில் தமிழக பா.ஜ., மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், சக்கரவர்த்தி, மாநில செயலர் கராத்தே தியாகராஜன், ஆலய மேம்பாட்டு பிரிவு தலைவர் நாச்சியப்பன் உட்பட, 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாலையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பங்கேற்று, கட்சியினருக்கு பழரசம் கொடுத்து, உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
பின், அண்ணாமலை பேசியதாவது:
ஹிந்து சமய அறநிலையத் துறை, கறுப்புப் பெட்டியை போல் இயங்குகிறது. அதன் செயல்பாடுகள் குறித்து, யாருக்கும் தெரிவதில்லை. இதைத் தெளிவுபடுத்த, பா.ஜ., உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது.
தமிழகத்தில் கோவில் நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அறநிலையத் துறை சட்டத்தின்படி, கோவிலில் இருந்து வரக்கூடிய வருமானத்தில், 12 சதவீதம் நிர்வாக செலவாக அரசு எடுத்துக் கொள்ளும்; 4 சதவீதம் தணிக்கைக்கு செலவிடப்பட வேண்டும்; மீதி வருமானம் முழுதும் கோவிலுக்கு செலவு செய்ய வேண்டும்.
மக்கள் அனைவரும் கோவில் உண்டியல்களில் காணிக்கை செலுத்துகின்றனர். ஆனால், பட்டர் முருக்கு, மிக்சர், டீ, காபி, சாப்பாடு, நாற்காலி, கார் போன்றவற்றிற்கு உண்டியல் வசூல் பணத்தில் இருந்து செலவு செய்யப்பட்டுள்ளது.
தணிக்கை செய்ததில், தமிழகம் முழுதும் உள்ள கோவில்களின் உண்டியல் பணத்தில் இருந்து, 1,302 கோடி ரூபாய் செலவு செய்த, 15.60 லட்சம் ரசீதுகள் தவறாக இருப்பதாக, ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சுரண்டல்
ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரிலும், பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள கோவில்களின் உண்டியல் பணத்தில் இருந்து செலவழிக்கப்பட்டுள்ள விபரம் மக்களுக்கு தெரிவிக்கப்படும்.
அமைச்சர்கள், அதிகாரிகள் நன்றாக இருக்கவும், கோவில் ஒப்பந்த பணிகள் கட்சிக்காரர்களுக்கு கொடுப்பதற்காகவும் ஒரு துறை இருக்கிறது என்றால், அது அறநிலைய துறை தான்.
கோவில் நிலங்கள் சூறையாடப்படுகின்றன; கணக்கில் இல்லாமல் கோவில்கள் இடிக்கப்படுகின்றன; பக்தர்களின் பணம் சுரண்டப்படுகிறது. கோவில்களுக்கு பக்தர்கள் வழங்கிய மாடுகளை காணவில்லை.
இதை ஒவ்வொன்றையும் பா.ஜ., ஆதாரத்துடன் வைத்து பேசுகிறது. தமிழகத்திற்கு தேவை இல்லாத ஆணி இருக்கிறது என்றால், அதுஅறநிலைய துறைதான்.
கோவில்களில் இருந்து ஆண்டுக்கு 120 - 140 கோடி ரூபாய் வருவாய் வருவதாக கணக்கு காட்டுகின்றனர்.
கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் இருந்து, 100 கோடி ரூபாய் வாடகை வருவாய் காட்டப்படுகிறது.
![]()
|
கோவில்களின் சொத்துக்கள் ஒரு சதுர அடி 1 ரூபாய் என, பல மடங்கு குறைவாக வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அமைச்சர் சேகர்பாபு தனக்கு சொந்தமான கட்டடங்களை, 1 ரூபாய்க்கு வாடகை விடுவாரா?
கோவில்கள் வாயிலாக, 1,600 கோடி ரூபாய்க்கு வருவாய் வர வேண்டும். கோவில் பணத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும், காலை சிற்றுண்டி வழங்கலாம்.
உண்டியல் மீது கண்
தமிழகத்தில் ஜாதியை வைத்து, தி.மு.க., அரசியல் செய்கிறது. தமிழகத்தில் உள்ள கோவில்களை எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்ற அறிக்கையை, அரசுக்கு வழங்க தயாராக உள்ளோம். அதை படித்து பார்த்து, அரசு தவறு இருந்தால் கூறலாம். கோவில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும்.
தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வரும்போது, அறநிலைய துறை வேண்டாம் என்று கையெழுத்திடப்படும். சுதந்திரத்திற்கு பின் கோவில்களில் இருந்து ஏராளமான சிலைகள் திருடப்பட்டன. அதை மத்திய பா.ஜ., அரசு மீட்டெடுத்து வருகிறது.
ஹிந்துக்களின் பாதுகாவலன் என்று சொல்லும் தி.மு.க., அரசு, ஒரு சிலையை மீட்டு வந்த தற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். அக்கட்சிக்கு கோவிலின் உண்டியல் மீது தான் கண் உள்ளது.
பா.ஜ., எந்த மதத்திற்கும் விரோதி இல்லை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட கோவில்களில் திருட அனுமதிக்கவில்லை. ஆனால், தி.மு.க., ஆட்சியில் கோவில் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.