ஈரோடு, ஜன. 22-
வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில், அமாவாசை தினமான நேற்று, தி.மு.க., கூட்டணி பிரசாரத்தை துவக்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்., - அ.தி.மு.க., நேரடியாக மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தை அமாவாசை தினம் என்பதாலும், காலை, 7:31 முதல், 9:00 மணி வரை நல்ல நேரம் என்பதால், தி.மு.க., - காங்., கூட்டணியினர், ஈரோடு பெரியார் நகரில் உள்ள வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி வீட்டருகே இருந்து பிரசாரத்தை துவக்கினர். காலை, 8:12 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே வந்த அமைச்சர் முத்துசாமிக்கு, மாநகர் மாவட்ட காங்., தலைவர் திருச்செல்வன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்பகுதி தெருக்களில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர்.
பின், நிருபர்களிடம் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: எம்.எல்.ஏ., திருமகன், குறுகிய காலம் பதவியில் இருந்தாலும், அன்பான அணுகுமுறையால் மக்களிடம் இடம் பிடித்தார். குறைந்த வயதில் அவரது மறைவு, பெரிய அனுதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதற்கேற்ப மீண்டும் காங்., போட்டியிட தி.மு.க., கூட்டணி கட்சிகள் இணைந்து முடிவெடுத்து முதல்வர் அறிவித்தார்.
தேர்தலின்போது வாக்குறுதியாக வழங்கிய திட்டங்களை, அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அதேநேரம் பெண்களுக்கு, 1,000 ரூபாய் உரிமைத்தொகை போன்ற திட்டங்கள், நிதி நெருக்கடியான நிலையிலும் எடுத்து செல்லப்படுகிறது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியினர் வெளியேறும்போது, பணச்சுமையை வைத்து சென்றனர். அதை சரி செய்து, நிதி வருவாயை அரசு அதிகரித்து, திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை கடந்த அரசு துவங்கியபோது, திட்டத்தால் பாதிக்கப்படுவோரை அழைத்து பேசவில்லை. திட்டம் துவங்கும் இடத்தில், முதல் பம்பிங் ஸ்டேஷன் அமையும் இடத்தில் உள்ளவர்களே எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள், 21 முறை அவர்களிடம் பேசி, தேவையான உதவி செய்து, சமாதானம் செய்து பணி நடக்கிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
ஓட்டு சேகரித்த வீடு, கடைகளில் மக்களுக்கு சாக்லேட், பிஸ்கெட் வழங்கினர். தி.மு.க., மற்றும் காங்., நிர்வாகிகள் பங்கேற்றனர்.