'நாலு பேருக்கு நன்றி... அந்த நாலு பேருக்கு நன்றி...' எனப்பாடுவோர்... ஐந்தாவதாக சாந்தகுமாரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆம், சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இவர் அத்தகைய சேவையை செய்கிறார்.
விபத்தில் சிக்கிய, ஆத்ம சாந்திஅடைந்தோரின் குடும்பத்தினர் அந்த நேரத்தில் செய்வதறியாமல் துவண்டு நிற்பர். அத்தகையோருக்கு கைகொடுக்கிறார் சாந்தகுமார். இவருக்கு தகவலை தெரிவித்தால்... இவரது 'பறக்கும் படை' ஆம்புலன்ஸை அனுப்புவார். ஊழியர்களும் உடன் செல்வர்.விபத்தில் பாதித்தோரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு பறப்பர். இதற்கென 'பேஷன்ட் ஆம்புலன்ஸ்' உள்ளது. உயிரிழந்தவரை 'பிரீஸர் பாக்ஸில்' வைத்து எடுத்துச் செல்வர். இவ்வகையில் 'ஏ டூ இசட்' பணிகளை இவரை நம்பி ஒப்படைக்கலாம். இவர் சென்னையில் மட்டும் 36க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வைத்துள்ளார். இவரது சேவை வெளிமாநிலத்திலும் பரந்து விரிந்துள்ளது.
விபத்தில் சிக்கியோரை காப்பாற்ற நவீன உபகரணங்கள், உறவினர்கள் உடனிருந்து வரவும், படுக்கை, சமையலறை, பயோ டாய்லெட், வைபை வசதி உடன் கூடிய கேரவன் ஆம்புலன்சும் உள்ளது. சென்னையில் அழைப்பு கிடைத்த 10 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் சென்று சேரும். மருத்துவமனையில் இருந்து உடலை ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்று அஸ்தி கரைக்கும் சேவையையும் செய்வார்.
சாந்தகுமார் கூறியதாவது: ஆம்புலன்ஸ் உருவாகும் முன் அம்பாசிடர் கார், வேன்களில் விபத்தில் சிக்கியோர், இறந்தோர் உடலை எடுத்துச் செல்வர். அதில் மற்ற பயணிகளை ஏற்றிச் செல்வது சிக்கலானது. இதை தவிர்க்க முதன்முதலாக பழைய வேன் வாங்கி அதை ஆம்புலன்ஸாக மாற்றினேன். இதனை முழுநேர தொழிலாக மாற்றி இன்று என் மனைவி, மகள் என குடும்பத்தினர் உட்பட 250 பேர் பணியாற்றுகின்றனர். முன்பு இறந்தோர் உடலை ஐஸ் பாக்ஸில் வைத்திருப்பர். இதில் சிரமங்களை சந்தித்ததால், இந்திய அளவில் முதன்முதலாக 'பிரீஸர் பாக்ஸ்'ஐ உருவாக்கி பயன்படுத்தினேன். இதற்கான 'பேடன்ட் ரைட்' என்னிடம் உள்ளது.
எனது ஆம்புலன்ஸ் சேவைக்கு வழக்கமான கட்டணம் மட்டுமே வசூலிக்கிறேன். ஜெயலலிதா, கருணாநிதி என பல வி.ஐ.பி.,க்களுக்கு எனது ஆம்புலன்ஸ் பயன்பட்டுள்ளது. அமெரிக்கா, ஆசியா அமைப்புகளிடம் விருது பெற்றுள்ளேன். சாதனை புத்தகங்களிலும் இடம் பெற்றுள்ளேன் என்றார். தொடர்புக்கு: 82915 82915