நமக்கு பிடித்தமான பொருட்களை பார்த்தால் அவற்றின் மீது நம்மை அறியாத ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு அழகில் மயங்கி, ரசனையில் லயித்து விடுவோம். சில நேரம் விரும்பிய பொருட்களுடன் ஒரு செல்பி எடுத்து மகிழ்வோம்.
சில பொருட்களை மட்டும் கையோடு எடுத்து செல்ல வேண்டும் என விரும்புவோர்களுக்கு பிடித்த கட்டடங்கள், பிடித்த வாகனங்கள் என போட்டோவை கொடுத்தால் அதனை தத்ரூபமாக மினியேச்சராக செய்து தருவதை பகுதிநேர தொழிலாக்கி கொண்டுள்ளார் சிவகாசியை சேர்ந்த ஐ.டி., ஊழியர் திலீப்குமார் 23.
அவர் கூறியதாவது: பள்ளியில் பயிலும் போதே அழகான கட்டடங்கள், ரோட்டில் செல்லும் வாகனங்களை நம் கையில் துாக்கி சென்றால் எப்படி இருக்கும் என நினைப்பேன். பள்ளி விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சி போன்றவற்றில் எனக்கு ஆர்வம் ஏற்படாது.
அந்த நேரங்களில் நமக்கு பிடித்த பொருட்களை பார்க்கும் போது அவற்றை சிறிய அளவிலான பொருட்களாக உருவாக்குவது என்ற சிந்தனையில் இருப்பேன். பள்ளி முடித்ததும் வீட்டிற்கு வந்து அட்டைகளை பயன்படுத்தி அழகிய கட்டடங்களை சிறிய அளவில் செய்தேன். அதனை கண்டு வீட்டில் உற்சாகபடுத்தினார்கள.
2019ல் பி.சி.ஏ., படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருந்தேன். கொரோனாவால் வீட்டில் முடங்கி இருந்தபோது தந்தைக்கு உதவியாக தச்சு வேலைகளில் ஈடுபட்டேன். வாகனங்கள், கட்டடங்களை சிறிய அளவில் போம் சீட், பி.வி.சி., சீட்களை பயன்படுத்தி மினியேச்சராக செய்ய துவங்கினேன். இதற்கு மக்களிடம் வரவேற்பு இருந்தது. இதுவரை 30க்கும் மேற்பட்டோருக்கு மினியேச்சர் வாகனம், வீடுகள் உள்ளிட்டவற்றை செய்து கொடுத்துள்ளேன். இவற்றை வாங்கி வரவேற்பறையில் வைக்கின்றனர். கலைநயத்துடன் இருப்பதால் நல்ல வரவேற்பு உள்ளது என்றார்.
இவரை பாராட்ட 63829 80169ல் தொடர்பு கொள்ளலாம்.