ஜப்பான் நாட்டை சேர்ந்த புத்த துறவி நிட்சு தட்சு பியூஜி. பீஹார் மாநிலம் ராஜ்கீர் மலையில் புத்த அமைதி கோபுரம் அமைத்தார். வட இந்தியாவில் 6 இடங்களில் அமைதி கோபுரங்கள் அமைத்தார்.
தென் மாநிலங்களில் முதல்முறையாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு கிராமத்தில் 2000ல் அமைதி கோபுரம் கட்டும் பணி துவங்கியது.
இக்கோபுரத்தின் உயரம் 100 அடி, அகலம் 150 அடி. இதன் அடிப்பகுதி, உச்சியில் புத்தரின் அஸ்தி வைக்கப்பட்டுள்ளது. 'நிப்போன்சன் மியொ ஹோஜி' அமைப்பு இப்பணிகளை செய்து வருகிறது. இதற்காக வீரிருப்பை சேர்ந்த ஓய்வு வட்டார வளர்ச்சி அலுவலர் முத்தையா தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். கட்டுமான பணி அடுத்தாண்டு முடியும். இதன் வளாகத்திலேயே அமைதி கோயிலும் கட்டப்பட்டது.
புத்த துறவிகள் புத்தரின் 'நா.மு.மியொ,ஹொ.ரென்.கே.கியோ' மந்திரத்தை பிரார்த்தனை செய்வர். இதன் அர்த்தம் 'அனைத்து உயிர்களிடத்திலும் உள்ள கடவுளை வணங்குகிறேன்' என்பதே. இக்கோயிலில் பிரார்த்தனை செய்வது மன அமைதியை விதைக்கிறது.
அமைதி விரும்புவோர் 98421 97716ல் ஹலோ சொல்லலாம்.
புத்தர் கோயில் செல்வது எப்படி
சங்கரன்கோயிலில் இருந்து வீரிருப்பு கிராமத்திற்கு பஸ், ஆட்டோ வசதி உள்ளது.
எது நாகரிகம்
நாகரிகம் என்பது மின்சார விளக்குகளும், ஆகாய விமானங்களும், மனிதனை கொல்வதும்; பொருட்களை அழிப்பதும், போர் புரிவதும் அல்ல. பிறரை போற்றுவதும் மதிப்பதுமே நாகரிகம் என்று கூறிய நிச்சு தட்சு பியூஜீ குருஜீ வழி நடப்போம் என்கிறார் கோயில் மேனேஜிங் டிரஸ்ட்டி இஸ்தானியா குருஜீ.
புத்தரின் தாமரை சூத்திரம்
பியூஜி குருஜீ உலகம் முழுமையும் போதனை செய்து உலகம் அமைதி பெற முயற்சித்தார். புத்தர் அருளிய தாமரை சூத்திரத்தைக் கற்று உணர்வோம். வன்முறை உலகை விட்டு ஒழிய இங்குள்ள கொட்டு ஒலித்து, மந்திரம் ஓதப்படும் என்றார் புத்தபிக்குனி லீலாவதி.
தர்மம் எங்கே இருக்கிறது
தான் தான் பெரியவர் என நினைக்கும் ஆண், பெண்களின் உள்ளார்ந்த மனத்திலும் கூட தர்மம் இருக்கிறது என நினைத்து மற்றவர்களை வணங்கவும், புகழவும் வேண்டும் என்றார் புத்தபிக்குனி ஹிமரோ.