இனிக்கும் தேனில் குழைத்து சமைத்த மென்குரல், துளிர்க்கும் இலைக்குள் பிறந்த பொன்மலர், பளிச்சிடும் பேச்சில் வெளிப்படும் துணிவு, பார்வையில் பொங்கி செயல்களில் நிரம்பி வழியும் பணிவு... என நிகழ்ச்சி தொகுப்பாளராக, பேச்சாளராக, எழுத்தாளராக, நடிகையாக அன்பு
கலந்த ஆளுமையால் ஈர்க்கும் மமதி சாரி உடன் ஒரு பேட்டி...
ஒரு எழுத்தாளராக பயணிக்கும் மமதி குறித்து
முன்பு 'டிவி' நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கிய போது அதற்குரிய கதை, திரைக்கதைகளை எழுதினேன். அதன் தாக்கம் என்னை எழுத்தாளராக்கியது.
இதுவரை நீங்கள் எழுதிய புத்தகங்கள்
குழந்தைகளுக்கான 'த மேக்கிங் ஆப் ஹீரோஸ்' வெளியானது. எளிய எழுத்து நடையில் பழைய மெட்ராஸ் (சென்னை) காட்சிகளை கண்முன் கொண்டு வரும் 'கோதை', ஆங்கிலம் மட்டும் அறிந்த குழந்தைகளுக்காக தங்லீஸில் எழுதிய 'குரல் பார் கிட்ஸ்,'இளைஞர்களுக்கான 'எக்ஸ்டாடினரி' புத்தகங்கள் வெளியாக உள்ளன. ஆடியோ வடிவமும் வெளியாகும்.
குழந்தைகளை கதை எழுத வைக்க முடியுமா
நான் படித்த பள்ளியிலேயே குழந்தைகளுக்கான பயிற்சி வகுப்பை முதலில் நடத்தினேன். நான் படிக்கும் போது பள்ளி முதல்வராக இருந்தவரே 'த மேக்கிங் ஆப் ஹீரோஸ்' புத்தகத்தை வெளியிட்டார். புத்தகம் விற்பனைக்கு பின் வரும் வருமானத்தில் ஒரு பங்கு சமூக சேவைக்காக வழங்குகிறேன்.
2023ல் மமதி நடிப்பில் வெளிவரும் படங்கள்
'துணிவு' படத்தில் நடித்துள்ளேன். அடுத்து 'கொலை' என்ற படத்தில் நடிக்கிறேன்.
துணிவு படம் குறித்து
படத்தில் எனக்கு நிறைய காட்சிகள் இல்லை. பிற கேரக்டர்களை, முக்கிய கட்டத்திற்கு முன்னெடுத்து செல்லும் ஒரு கேரக்டர் தான் நான்.
அஜித் பற்றி...
கஷ்டங்கள் இல்லாமல் யாரும் இல்லை. வாழ்க்கை என்பது வாழ்வதற்காக தான் என நாம் அவரை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். அடக்கமும், திறமையும், அனைவரது அன்பையும் பெற்ற மனிதர்.
உங்களின் துணிவு...
தன்னம்பிக்கை தான் துணிவு. என் துணிவுக்கு குறைச்சல் இல்லை. அதை பலர் திமிர் என்பர். அதுவும் எனக்கு அதிகம் தான்.
சினிமாவில் பார்க்க முடியவில்லையே...
'12 பி' படத்திற்கு பின் தற்போது நடிக்கிறேன். வாய்ப்பு வந்தும் சில காரணங்களால் நடிக்கவில்லை. நடிப்பை ரொம்ப மிஸ் பண்ணுவதால் இனி நடிப்பேன். ரஜினியுடன் நடிப்பது என் கனவு.