அறிவியல் ஆயிரம்
உப்பை கட்டுப்படுத்தும் 'ஸ்பூன்'
உணவில் உப்பு அவசியம். ஆனால் அதன் அளவு கட்டுக்குள் இருக்க வேண்டும். உணவில் உப்பு அதிகமானால் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். இந்நிலையில் உணவில் உப்பின் சுவையும் குறையாமல், அதன் அளவும் அதிகரிக்காமல் இருக்கும் வகையில் மின்சார ஸ்பூன், சிறிய பாத்திரத்தை ஜப்பான் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஸ்பூன் மூலம் உணவை சாப்பிடும் போது, உணவில் உப்பின் அளவு குறைவாக இருந்தாலும், உப்பு சரியான அளவில் இருக்குமாறு நாக்கை உணரச் செய்கிறது. இதனால் சுவையும் மாறுவதில்லை. உடலில் உப்பும் அதிகரிப்பதில்லை.
தகவல் சுரங்கம்
பெரிய பாலைவனம்
அதிக பரப்பளவில் மணல், மணற்குன்றுகள் நிறைந்த பகுதி பாலைவனம். இது உலகின் மொத்தப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி. இங்கு உயிரினங்கள் வாழ்வது கடினம். இவை ஆண்டுக்கு 250 மி.மீ., க்குக் குறைவாக மழையைப் பெறுகின்றன. அதிக வறட்சியைத் தாங்கி வளரும் கள்ளி, பனை போன்ற சில தாவரங்களே இங்கு வளர்கின்றன. கங்காரு, எலி, சில வகைப் பாம்பு, ஒட்டகம் போன்றவை பாலைவனச்சூழலைச் சமாளித்து உயிர்வாழும். உலகின் பெரிய பாலைவனம் ஆப்ரிக்காவில் உள்ள சஹாரா பாலைவனம். இதன் பரப்பளவு 92 லட்சம் சதுர கி.மீ.