பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளுக்கு மட்டுமல்லாமல், மகளிர்தினம், குழந்தைகள் தினம், தேசத்தலைவர்கள் பிறந்த நாள், கொரோனா விழிப்புணர்வு, 'எய்ட்ஸ்' விழிப்புணர்வு என்று, 'டிரெண்டி'யாக கோலம் வரைந்து அசத்தும், திருவண்ணாமலை மாவட்டம், பெரிய ஓலைப்பாடியைச் சேர்ந்த சூர்யா: பள்ளியில் படித்த போது சுதந்திர தினம், குடியரசு தினம், ஆசிரியர் தினம் மற்றும் முக்கிய பிரமுகர்கள், உயரதிகாரிகள் வருகை தரும் போது, பள்ளியில், மாணவியரான நாங்கள் கோலம் வரைவோம்.
அதில் என்னுடைய கோலமே பிரதான இடம் பெறும். நிகழ்ச்சிக்கு வருகை தரும், வி.ஐ.பி.,களை வரவேற்க எத்தனையோ அலங்காரங்கள் செய்திருந்தாலும், அவர்களின் பார்வை, நான் வரைந்த கோலத்தின் மீது சில வினாடிகள் நீடிக்கும்.
மேடையில் பேசும் போது பலரும், என் கோலங்களை பாராட்டியிருக்கின்றனர்.
வண்ணப்பொடிகளை திருவண்ணாமலை மற்றும் சென்னையில் வாங்குவேன். ஒரிஜினல் கோலப்பொடியை வாங்குவதற்காக, திண்டிவனம் வரை அலுக்காமல் சென்று வருவேன்.
வண்ணப் பொடிகளை ஒன்றொடொன்று, 'மிக்ஸ்' செய்து, பல புதிய வண்ணங்களை நானாகவே உருவாக்கியும் பயன்படுத்துவேன்.
ஏராளமான அமைப்புகளிடம் இருந்து பாராட்டுகளும், விருதுகளும், பரிசுகளும் கிடைத்துள்ளன.
'கொரோனா' கால கட்டத்தில் பல்வேறு இடங்களில் நான் வரைந்த கொரோனா விழிப்புணர்வு கோலத்தை பார்த்த, அப்போதையமாவட்ட ஆட்சியர் கந்தசாமி, நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
'உங்கள் வீட்டு வாசலில் வரையப்பட்டுள்ள கோலத்தை பார்த்தாலே அன்றைய தினம் என்ன விசேஷம்என்பதை தெரிந்து கொள்ளலாம்' என்று, பலரும் மகிழ்ச்சியுடன் சொல்வதுண்டு.
ஒருமுறை சனிப்பெயர்ச்சி தினத்தன்று, காகம் வாகனத்தில் சனி பகவான் அமர்ந்திருப்பதை போன்று வரைந்திருந்தேன்; அந்தக் கோலத்தை பார்த்த ஒருவர் என்னிடம், 'இன்றோடு எனக்கு ஏழரைச்சனி முடிகிறது.
'திருநள்ளாருக்கு போக முடியாத சூழல்; ஆனால், சனி பகவானை நேரில் சென்று வணங்கிய திருப்தியை, உங்கள் கோலம் எனக்கு கொடுத்து விட்டது' என்று நெக்குருகி சொன்னார்.
'உலக சாதனை செய்து, 'கின்னஸ்' சாதனை சான்றிதழ் வாங்குங்கள்' என்று, பலரும் ஊக்குவிக்கின்றனர்; அதற்கான முயற்சிகளை தற்போதுமேற்கொண்டு உள்ளேன்.
கோலமாவில் வரையும் கோலத்தையே, துாரிகை கொண்டு வரைய கற்றுக் கொள்கிறேன்.
தவிர, விஞ்ஞான ரீதியாக, 'அனிமேஷன்'கற்றுக் கொள்ளவும்விரும்புகிறேன். அவற்றிலும் சாதனை மைல் கல்லை நிச்சயம் தொடுவேன்!