ஊட்டி;மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பெண் குழந்தைகளை சேர்த்து பயனுடைய அஞ்சல் துறை அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய அரசால் கடந்த, 2015ல் 'செல்வமகள் சேமிப்பு திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், பெண் குழந்தை பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை துவக்கி முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்சம், 250 ரூபாய் செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம். அதிகபட்சமாக, 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். செல்வமகள் திட்டத்தில், 7. 6 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் இரண்டு பெண்களுக்கு மட்டுமே செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதன்படி, நீலகிரியில் இத்திட்டத்தில், 50 சதவீதம் பேர் சேர்ந்துள்ளனர்.
நீலகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தனலட்சுமி கூறுகையில்,''நீலகிரி கோட்டத்திற்கு கீழ் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் சிறப்பு முகாம்கள் வரும் பிப்., 9, 10 தேதிகளில் நடக்கிறது. இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு கணக்குகளை துவங்கி பயன் பெற வேண்டும். செல்வமகள் சேமிப்பு கணக்கை தங்கள் அருகில் உள்ள அஞ்சலகத்தில் துவங்கலாம். குழந்தையின் பிறப்பு சான்றிதழ் எடுத்து செல்ல வேண்டும்,'' என்றார்