பந்தலுார்:'பந்தலுார் தேவாலா பகுதியில் தார்கலவை ஆலை செயல்பட்டதால் கெரசின் ஊற்றி தற்கொலை செய்து கொள்வேன்,' என ஊர் தலைவர் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே தேவாலா பகுதியில் தார் கலவை ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து எழும் நச்சு புகையால் புற்றுநோயால் பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், 'தார் கலவை ஆலையை இங்கிருந்து வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்,' என, வலியுறுத்தி இப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு தார் கலவை ஆலை செயல்பட ஆரம்பித்தது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த ஊர் தலைவர் ஹாரிஸ் கூறுகையில்,''இங்கு தார் கலவை ஆலை தொடர்ந்து செயல்பட்டால் கெரசின் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொள்வேன்,'' என, தெரிவித்து சாலைக்கு வந்தார். மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால், காலை முதல், கூடுதல் எஸ்.பி., மோகன் நிவாஸ், டி.எஸ்.பி.,செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் திருஞான சம்பந்தம் ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, ஆர்.டி.ஓ., முகமது குதுரதுல்லா, கூடுதல் எஸ்.பி.,மோகன் நிவாஸ், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சிந்தனைச் செல்வன், தாசில்தார் சித்தராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், மாலை, 3:00 மணிக்கு தார் கலவை ஆலையில் நேரில் ஆய்வு செய்தனர்.
பின், தார் கலவை ஆலை உரிமையாளர் ராயின் வெளியூறுக்கு சென்றதால், ஆலை மேலாளரிடம் கடிதம் ஒன்றை அளித்ததனர். அதில்,'மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்த பின்னர், உரிய அனுமதி பெற்று ஆலையை இயக்க வேண்டும்,' என, கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தார் கலவை பணி நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.