'எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்புக்கு கூறப்பட்ட திட்டங்களை காங்கிரஸ் நிராகரித்துள்ளது. தனித்து இயங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது' என, திரிணமுல் காங்கிரஸ்கூறியுள்ளது.
லோக்சபாவுக்கு, ௨௦௨௪ல் தேர்தல் நடக்க உள்ளது. இதில் பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைப்பது தொடர்பாக பல கட்சித் தலைவர்கள் முயன்று வருகின்றனர்.
பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ் குமார், தெலுங்கானா முதல்வரும், பாரத ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி இதில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து திரிணமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறியுள்ளதாவது:
கடந்த, 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல் மற்றும் இதற்கிடைப்பட்ட காலத்தில் நடந்த பல மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியை தழுவியுள்ளது.
வரும், 2024லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான், பா.ஜ.,வுக்கு கடுமையான சவால் கொடுக்க முடியும்.
இதற்காக எதிர்க்கட்சிகள் இடையே ஒருங்கிணைப்பு குழு அமைப்பது, பா.ஜ., ஆளும் மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் இணைந்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என, பல யோசனைகளை மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
அவர் கூறியுள்ள அறிவியல்பூர்வமான திட்டங்கள் குறித்து காங்கிரஸ் எதுவும் கூறவில்லை. காங்கிரஸ் கட்சியினர் தனியாக இயங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுடில்லி நிருபர் -