காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் இயங்கும் காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தின் தரைதளத்தில் பார்சல் பிரிவு, பதிவு மற்றும் விரைவு தபால், தபால்தலை விற்பனை, பல்வேறு வைப்பு திட்டங்களுக்கான பணம் செலுத்தும் கவுண்ட்டர், ஆதார் சேவை மையம், தலைமை அஞ்சல் அலுவலர் உள்ளிட்ட பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது.
முதல் தளத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவு, 'ஸ்டாக் ரூம்' உள்ளிட்ட பிரிவு அலுவலகமும், இரண்டாவது தளத்தில் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், 'இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்' பிரிவு அலுவலகம் உள்ளிட்டவை இயங்கி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் தினமும் தலைமை அஞ்சலகத்திற்கு வந்து செல்கின்றனர். புதிதாக வரும் வாடிக்கையாளர்கள் எந்த பிரிவு அலுவலகம் எந்த இடத்தில் இயங்கி வருகிறது என, தெரியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில், அஞ்சலகம் நிர்வாகம் சார்பில், வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப தரைதளம், முதல் தளம் மற்றும் இரண்டாவது தளத்தில் எந்தெந்த அலுவலகம் இயங்கி வருகிறது என, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அறிவிப்பு பலகை அஞ்சலகம் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆங்கிலம் தெரியாமல் தமிழ்மட்டுமே படிக்க தெரிந்த வாடிக்கையார்கள் எந்த பிரிவு அலுவலகம் எங்கு இருக்கிறது என்பதை படித்து அறிந்துகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
எனவே, ஆங்கிலத்தில் உள்ளதைப்போன்று, தமிழிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என, அஞ்சலக வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.