மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த படாளம் பகுதியில், சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலை அமைக்கும் பணி நடப்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, செங்கல்பட்டில் இருந்து ஆத்துார் சுங்கச்சாவடி வரையிலான தேசிய நெடுஞ்சாலையின் இரு மார்க்கத்திலும், சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டன. இதனால், வாகன விபத்துகள் அதிகளவில் ஏற்பட்டன.
பயணியர் வேதனை
எனவே, கடந்த இரண்டு நாட்களாக, அதிகமாக பாதிப்புக்கு உள்ளான படாளம் -- மாமண்டூர் வரையிலான சாலையில், பள்ளம் தோண்டி, புதிய சாலை அமைக்கும் பணியில், தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் முதல், சாலைப்பணி நடைபெற்று வருவதால், சென்னையில் இருந்து வரக்கூடிய வாகனங்கள், மறுமார்க்கத்தில், ஒருவழிப் பாதையாக அனுமதிக்கப்படுவதால், கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுஉள்ளது.
இதனால், 7 கி.மீ., துாரம் கடும் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது.
இப்பகுதிகளைக் கடக்க, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது என, போக்குவரத்து பயணியர் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, விடுமுறை நாட்களை தவிர்த்து, மற்ற நாட்களில் சாலைப்பணி செய்து இருக்கலாமென, இருசக்கர வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
சட்டம் - ஒழுங்கு
இதுகுறித்து, பேருந்து பயணி க.உதயகுமார், 37, கூறியதாவது:
படாளம் -- மாமண்டூர் பகுதியைக் கடக்க, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. சாலைப் பணிகள் நடக்கும் பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, போதுமான போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசார் இல்லை.
தண்ணீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்குக் கூட வழி இல்லாமல், பேருந்து பயணியர் தவித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.