திருப்போரூர் : திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் அடுத்த சிறுசேரியில், 630 ஏக்கர் பரப்பில், சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா உள்ளது. இதில், 30க்கும் மேற்பட்ட மென்பொருள் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இதில், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், வெவ்வேறு நேரங்களில் பணிபுரிகின்றனர். மாநகர பேருந்துகள், ஓ.எம்.ஆர்., சாலை - ஏகாட்டூர் பஸ் நிறுத்தத்தில் நிற்கின்றன.
அங்கிருந்து, 1.5 கி.மீ., துாரம், ஐ.டி., ஊழியர்கள் நடந்து தான் நிறுவனத்துக்கு சென்றனர். சிப்காட் வளாகத்திற்குள் ஊழியர்கள் வந்து செல்ல, தனி பேருந்து இயக்க வேண்டும் என, ஐ.டி., நிறுவனங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தன.
இதை அடுத்து, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், சிறுசேரி சிப்காட்டிற்கு, கோயம்பேடு, பிராட்வே உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 80 பேருந்துகள் 100 நடைகள் இயக்கப்படுகின்றன.
ஆனால், சிறுசேரி சிப்காட்டில் பேருந்து நிலையம் இல்லாததால், மாநகரப் பேருந்துகள் அனைத்தும் சாலையோரத்தில் நிறுத்தப்படுகின்றன.
இங்கு, போதிய அளவு பேருந்து நிலைய நிழற்கூரையுடன் இருக்கைகள், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல், ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே, அடிப்படை வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என, ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.