உடுமலை:உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், தை அமாவாசையை முன்னிட்டு, பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டிகளில் வந்து விவசாயிகள் வழிபட்டனர்.
திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகா சிவராத்திரி போன்ற நாட்களில், சிறப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது.
அந்நாட்களில், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலை, பழநி உட்பட பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் இங்கு வருகை தருவர். அவ்வகையில், இந்த ஆண்டு தை அமாவாசையான நேற்றுமுன்தினம், திருமூர்த்திமலை, பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
தை அமாவாசை தினத்தன்று, மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை முதலே, நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் நீராடியும், பாலாற்றின் கரையில், முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், பிண்டம் கரைத்தும் வழிபட்டனர்.
சுற்றுப்புற கிராமங்களிலிருந்து விவசாயிகள், நுாற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகளில், பாரம்பரிய முறைப்படி திருமூர்த்திமலைக்கு வந்து, வேளாண் வளம், கால்நடை வளம் செழிக்கவும் வழிபட்டனர்.
இதே போல், சின்னபொம்மன்சாளை செல்வமாரியம்மன் கோவிலில், வெள்ளிக்கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சோமவாரபட்டி அமரபுயங்கீஸ்வரர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.