உடுமலை:'நீட்ஸ்' திட்டத்தில் மானியத்துடன் கடன் பெற்று தொழில் துவங்க முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
முதல் தலைமுறை தொழில்முனைவோர் மானியத்துடன் கூடிய, வங்கி கடன் பெற்று தொழில் துவங்க, 'நீட்ஸ்' திட்டம் கைகொடுக்கிறது.
உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு, 10 லட்சம் ரூபாய் முதல் 5 கோடி வரை, வங்கிகள் மற்றும் தொழில் முதலீட்டு கழகம் வாயிலாக, 25 சதவீத மானியத்துடன் நிதியுதவி வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு, 25 சதவீத மானியத்துடன் கூடுதலாக, 10 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. அனைத்துப் பிரிவினருக்கும், 3 சதவீதம் பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும்.
தகுதிகள் என்னென்ன?
இந்த திட்டத்தில் கடன் பெற, பொது பிரிவினர் 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினருக்கு, 45 வயதுக்குள் இருக்கவேண்டும்.
பிளஸ் 2, பட்டப்படிப்பு ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் வாயிலாக தொழில்சார் பயிற்சி பெற்ற இளைஞர்கள், மகளிர் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
நீட்ஸ் திட்டத்தில் கடன் பெறும் பொது பிரிவு பயனாளிகள் தங்கள் பங்களிப்பாக, திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம்; சிறப்பு பிரிவு பயனாளிகள், 5 சதவீத பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும்.
விருப்பமுள்ள தொழில் முனைவோர், www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள -முகவரியில் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் விபரங்களுக்கு அவிநாசி ரோடு அனுப்பர்பாளையம் புதுாரில் உள்ள மாவட்ட தொழில் மையம் மற்றும் 0421 2475007, 9500713022 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.