ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், யார்போட்டியிடுவது என்பது தொடர்பாக, ஒரே கூட்டணியில் உள்ள பா.ஜ., - அ.தி.மு.க., இடையே இழுபறி ஏற்பட்டுள்ளது.அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் போட்டியிடும் என்றுஅறிவித்துள்ளதாலும், களமிறங்க பா.ஜ.,வும் மும்முரம்காட்டுவதாலும், எப்போதும் இல்லாத வகையில், இந்தஇடைத்தேர்தலில் வினோதம் அரங்கேறி வருகிறது.
![]()
|
ஈரோடு கிழக்கு தொகுதி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா., மாரடைப்பால் மரணம் அடைந்தார். அத்தொகுதியில், பிப்., 27ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இது, தி.மு.க., ஆட்சி அமைந்த பின் நடைபெறும் முதல் இடைத்தேர்தல். அதேபோல, தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால், முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தி.மு.க.,வுக்கு, கூட்டணி கட்சியான காங்கிரஸ் வெற்றி பெறுவது கவுரவ பிரச்னை. அதேநேரத்தில், உள்ளாட்சி தேர்த லில் தனித்து போட்டியிட்டு, கட்சி செல்வாக்கை நிரூபித்தது போல, இந்த தேர்தலிலும் செல்வாக்கை நிரூபிக்க, தமிழக பா.ஜ., விரும்புகிறது.
கடந்த தேர்தலில், ஈரோடு கிழக்கில் த.மா.கா., போட்டியிட்டாலும், கொங்கு மண்டலத்தில் தங்கள் செல்வாக்கை காட்டுவதற்காக, அ.தி.மு.க., நேரடியாக போட்டியிடும் என்று, பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்கு, த.மா.கா.,வும் பச்சைக்கொடி காட்டி விட்டது.
அடுத்து, பா.ஜ.,வின் ஆதரவை கேட்கும் வகையில், சென்னை கமலாலயத்தில், அண்ணாமலையை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சிலர் சந்தித்து பேசினர்.
இதற்கிடையில், 'இடைத்தேர்தலில், அ.தி.மு.க., போட்டியிடும். பா.ஜ., போட்டியிட்டால், தேசிய கட்சி என்ற அடிப்படையிலும், லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள வேண்டி உள்ளதாலும், அக்கட்சியை ஆதரிப்போம்; இரட்டை இலை சின்னம் முடங்க நான் ஒருபோதும் காரணமாக இருக்க மாட்டேன்' என, பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார்.
இதன் வாயிலாக, பழனிசாமி அணிக்கு பன்னீர்செல்வம் நெருக்கடி கொடுத்துள்ளார்.
இதனால், வேட்பாளரை நிறுத்துவதா அல்லது பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிப்பதா; போட்டியிட்டால், இரட்டை இலை சின்னம் முடங்கி விடுமோ என்ற குழப்பம், பழனிசாமி அணிக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, முக்கிய நிர்வாகிகள் பல கட்ட ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதேநேரம், அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் வழியாக, கூட்டணி கட்சி தலைவர்களின் ஆதரவை பெறும் முயற்சியும் அரங்கேறி வருகிறது.
பா.ஜ., ஆர்வம்
'கொங்கு மண்டலம் தங்களது கோட்டை' என, பா.ஜ., தொடர்ந்து கூறி வருகிறது.
கடந்த சட்டசபை தேர்தலில், கோவை கிழக்கில் வானதி, மொடக்குறிச்சியில் டாக்டர் சரஸ்வதி என, இருவர் வெற்றி பெற்றனர்.
எனவே, ஈரோடு கிழக்கு தொகுதியில், தமிழக பா.ஜ., துணை தலைவர் ஏ.பி.முருகானந்தம் தனக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது எனக் கூறி, போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அண்ணாமலை தலைமையில், 14
பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து, பா.ஜ., மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்தது. பா.ஜ., தேர்தல் குழுவினர் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், அமைப்பு பொதுச் செயலர் கேசவவிநாயகம், மாவட்டத் தலைவர் வேதானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பா.ஜ., தனித்து போட்டியிட்டால், எத்தனை சதவீத ஓட்டுகள் கிடைக்கும்; அ.தி.மு.க., இரண்டு அணியாக போட்டியிடும் பட்சத்தில், இரண்டாம் இடம் பெற்று, தி.மு.க.,வுக்கு மாற்று, பா.ஜ.,தான் என்பதை நிரூபிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
![]()
|
இதற்கிடையில், டில்லி பா.ஜ., மேலிடம், தனிக்குழு அமைத்து தேர்தல் கள ஆய்வுகளை நடத்தி அறிக்கை பெற்றுள்ளது. அறிக்கையை ஆய்வு செய்த பின், இடைத்தேர்தல் போட்டி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, இரண்டு நாட்களுக்குள் வெளியாகும் என, கூறப்படுகிறது.
எப்போதும், வேட்பாளர் தேர்வில் கடைசி நேரம் வரை இழுத்தடிக்கும் காங்., கட்சி, நேற்று இரவு இளங்கோவனை வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்பதில், பா.ஜ., - அ.தி.மு.க., இடையே ஏற்பட்டுள்ள குழப்பம், ஓரிரு நாளில் முடிவுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
@ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிடும், காங்., வேட்பாளர் தேர்வு தொடர்பாக, சென்னை சத்தியமூர்த்தி பவனில், அக்கட்சியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன், தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தினார்.அவரிடம் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத், விருப்ப மனு தாக்கல் செய்தார். ஆனால், கட்சி பணிகளுக்கு தொடர்பு இல்லாத, சஞ்சய் சம்பத்துக்கு, 'சீட்' வழங்க எதிர்ப்பு எழுந்தது.
ஈரோடு கிழக்கு மாவட்ட காங்., தலைவர் மக்கள் ராஜன் கூறியதாவது:இடைத்தேர்தலில் எனக்கு கட்டாயம் சீட் வேண்டும். கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளேன். கடந்த, 30 ஆண்டுகளாக தொகுதியில் கட்சியை வளர்க்க, நான் நிறைய இழந்திருக்கிறேன். ராகுல், ஈரோடு வந்தபோது, நெசவாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்து, ஐந்து இடங்களில் பேரணி நடத்தினேன். கட்சியில் உழைத்தவருக்கு சீட் தர வேண்டும் என, தினேஷ் குண்டுராவிடம் தெரிவித்தேன்; பரிசீலிப்பதாக கூறினார்.
சஞ்சய் சம்பத் உட்பட யாரும் சீட் கேட்கலாம். அவர் கட்சிக்காக உழைத்தாரா; இல்லையா என்பது குறித்து, நான் வேறுபடுத்தி பேச விரும்பவில்லை.இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், 'காங்., சார்பில், ஈரோடு கிழக்கு தொகுதியில், தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் போட்டியிடுவார்' என, அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் முகுல்வாஸ்னிக், திகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
'ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், காங்., சார்பில், என் இளையமகன் சஞ்சய்சம்பத் போட்டியிடுவார்' என, அவரது தந்தையும், தமிழக காங்., முன்னாள் தலைவருமான இளங்கோவன், நேற்று முன்தினம் அறிவித்தார்.சஞ்சய் சம்பத், அரசியலுக்கு புதுமுகம் மட்டுமல்ல; கட்சி பணிகளிலும் ஈடுபடாத தொழிலதிபர் என்பதால், அவருக்கு பதிலாக இளங்கோவன் தேர்தலில் நிற்க வேண்டும் என, தி.மு.க., தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை மணப்பாக்கத்தில்
உள்ள இளங்கோவனின் வீட்டிற்கு, நேற்று காலை, 11:00 மணிக்கு, முதல்வர்
ஸ்டாலின் சென்றார். அவரை இளங்கோவனும், அவரின் குடும்ப உறுப்பினர்களும்
வரவேற்றனர். அப்போது, இடைத்தேர்தலில் இளங்கோவன் போட்டியிட வேண்டும் என,
முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து, தன் மகன்
போட்டியிடும் முடிவை மாற்றி, தானே போட்டியிடுவதாக, டில்லி மேலிடத்தில்
தெரிவித்ததும், இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இளங்கோவன் எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றால், சட்டசபையில் கூட்டத்தொடரில் நன்றாக பேசுவார் என்றும், எதிர்க்கட்சியினருக்கு, நகைச்சுவையாகவும், நையாண்டியாகவும் பதிலடி தந்து, சபையை கலகலப்பாக வைத்திருப்பார் என்றும், அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -