உடுமலை:''மொபைல் போன்களை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; அடிமையாக கூடாது,'' என ஜி.வி.ஜி., கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர் பேசினார்.
உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி செயலர் சுமதி தலைமை வகித்தார். இயக்குனர் மஞ்சுளா, முதல்வர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
சென்னை, மாநில அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கவுன்சிலின் உறுப்பினர் செயலர் சீனிவாசன் மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: சமூக வளர்ச்சிக்கு பெண் கல்வி முக்கியமானதாகும்; கற்றுக்கொள்வது என்பது பட்டத்துடன் முடிவடைவது இல்லை.
ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றை கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். கற்பதற்கு முடிவென்பது இல்லை. பட்டம் பெற்ற மாணவியர், கல்வி மேற்படிப்பையும், ஆராய்ச்சிக்கல்வியை தொடர வேண்டும். தன்னையும், தன் உடலையும், தன் மனதையும் நேசிக்க வேண்டும்; மொபைல் போன்களுக்கு அடிமையாகாமல், தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
பட்டமளிப்பு விழாவில், இளங்கலையில், 1,499 மாணவியருக்கும், மதிப்பெண் அடிப்படையில், முதல் இடம் பெற்ற, 34 மாணவியருக்கும் சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது.
முதுநிலை பாடப்பிரிவுகளில், 278 மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
இதில், மதிப்பெண் தர வரிசையில், முதலிடம் பெற்ற, 13 மாணவியருக்கு சிறப்பு பதக்கம் என, பட்டமளிப்பு விழாவில், மொத்தம், 1,777 மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
Advertisement