- நமது நிருபர் -
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு விடுதிகளில், காலியாக உள்ள வார்டன், சமையலர், வாட்ச்மேன், துாய்மை பணியாளர் பணியிடங்களை, தொகுப்பூதிய அடிப்படையிலாவது, விரைந்து நிரப்ப வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில், அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்காக, 29 விடுதிகள் நடத்தப்படுகின்றன. இதில், 1,700 மாணவ, மாணவியர் தங்கி, படிக்கின்றனர்.
ஒவ்வொரு விடுதிக்கும் வார்டன், சமையலர், துாய்மை பணியாளர் மற்றும் காவலர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள, 29 விடுதிகளில், 23ல் மட்டுமே வார்டன்கள் இருக்கின்றனர். 6 விடுதிகளில் பணியிடம் காலியாக இருப்பதால், அருகாமையில் உள்ள விடுதியை சேர்ந்த வார்டன்கள் கூடுதலாக கவனித்து கொள்கின்றனர்.
கோவை மாவட்டத்துக்கு, 57 சமையலர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 23 பேரே பணியில் இருக்கின்றனர். மீதி பணியிடங்கள் காலியாக இருப்பதால், மாணவ - மாணவியருக்கு தேவையான உணவு வகைகள் குறித்த நேரத்துக்குள் தயாரிக்க முடியாமல், வார்டன்கள் அவதிப்படுகின்றனர்.
விடுமுறை கூட எடுக்க முடியாமல், ஒரு சமையலரே வாரத்தின் ஏழு நாட்களும் சமைக்க வேண்டிய நெருக்கடியான சூழல் நிலவுவதால், மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதேபோல், 20 வாட்ச்மேன் பணியிடங்களுக்கு, 6 பேரே பணியில் இருக்கின்றனர். 29 துாய்மை பணியாளர்கள் பணிபுரிய வேண்டும்; 17 பேரே பணியில் இருக்கின்றனர். மீதமுள்ள இடங்கள் காலியாக இருப்பதால், அரசு விடுதிகளின் சுகாதாரமும், பாதுகாப்பும் கேள்விக்குறியாகி இருக்கிறது.
இதுதொடர்பாக, அரசு விடுதி வார்டன்கள் கூறியதாவது:
தமிழக அரசு அறிவித்துள்ள உணவு பட்டியல் படி, உணவு தயாரித்து வழங்க வேண்டுமெனில், ஒவ்வொரு விடுதிக்கும் தலா இரண்டு சமையலர், ஒரு உதவியாளர் அவசியம் தேவை. ஒரு சமையலரால் வாரத்தில் ஏழு நாட்களும், தினமும் மூன்று வேளை உணவு தயாரிப்பது இயலாத காரியம்.
பல விடுதிகளில் ஒரு சமையலரே பணிபுரிகின்றனர். சில இடங்களில், சமையலர் இல்லாமல், வார்டன்களே சமையல் வேலையையும் கூடுதலாக கவனிக்கின்றனர். தொகுப்பூதிய அடிப்படையிலாவது, சமையலர் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையினரிடம் கேட்ட போது, 'அரசு விடுதிகளில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான கோப்பு தயாராகி விட்டது. விரைவில் காலி பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும்' என்றனர்.