ச.தெ.மாரியப்பன், புளியங்குடி, தென்காசி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முதல்வர் ஸ்டாலின் அவர்களே...
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மின் பயன்பாடு மாதந்தோறும் கணக்கெடுக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்படும் என்றீர்கள்; ஆனால், நடக்க வில்லை. மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை தருவோம் என்றீர்கள்... அதையும் தந்தபாடில்லை. பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று பீற்றினீர்கள்; அதுவும் நடக்கவில்லை.
'நம் மக்கள் நல்ல சாப்பாடு சாப்பிட்டால், அறிவு வளர்ந்து விடும்; கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவர்' என்று, ஆங்கிலேயேர்கள் நினைத்தனர்; அதனால், மக்களுக்கு நல்ல சாப்பாடு சாப்பிட அனுமதிக்கவில்லை.நாடு சுதந்திரம் அடைந்த பிறகும், இந்த நிலைமை மாறவில்லை. மாடும், பன்றியும் தின்னக்கூடிய அரிசியையே, மக்களுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக, கழக அரசுகள் வழங்கி வருகின்றன.
அதேநேரத்தில், பள்ளிகள், கல்லுாரிகள் அருகே, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கின்றன. குழந்தைகள் சாப்பிடும் சாக்லேட்டில் கூட, போதைப்பொருள் கலப்படம் வந்து விட்டது. இதற்கு உறுதுணையாக இருக்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கிறீர்களா என்றால், அதுவும் இல்லை.
ஆனால், திராவிடமா, தமிழ்நாடா, தமிழகமா என்று பேசியும், அதுதொடர்பான விவாதங்களை நடத்தியும், நாளையும், பொழுதையும் கழிக்கிறீர்கள்.இது போன்ற நேரத்தை வீணடிக்கும் விவாதங்களை ஓரங்கட்டி வைத்து, மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை நிறைவேற்ற முற்படுங்கள். மத்திய அரசுடன், கவர்னருடன் சண்டையிடுவதில் நேரத்தை செலவிடுவதை விட, சாமானியர்களின் குறைகளை தீர்ப்பதில் அக்கறை காட்டுங்கள்; அவர்கள் தான் உங்களின் ஓட்டு வங்கிகள் என்பதை மறந்து விட வேண்டாம்.
சும்மா பூச்சி காட்டாதீங்க அதிகாரி!
எஸ்.மோகன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளரும், கோடிகளை கொட்டாமல் வெற்றிக்கனியை சுவைத்திட முடியாது என்ற நிலைமையே, பல ஆண்டுகளாக நீடிக்கிறது. அதனால், 'வசதி'யானவர்களையே, வேட்பாளர்களாக அரசியல் கட்சிகள் நிறுத்தும் போக்கும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், 'சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அதிகபட்சம், 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. அதற்கு மேல் செலவு செய்தது நிரூபிக்கப்பட்டால், தகுதி நீக்கம் செய்யப்படுவர்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவரின் இந்த எச்சரிக்கையை வழக்கமானது என்றே, அரசியல் கட்சியினர் நினைப்பர். அதை சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதே உண்மை நிலவரம். காரணம் என்னவெனில், சாஹு விடுத்துள்ள எச்சரிக்கையில், 'நிரூபிக்கப்பட்டால்' என்றதொரு கொக்கி வைத்திருக்கிறார் பாருங்கள்... அது தான்.
இதுவரை நம் நாட்டில் நடந்த எந்த தேர்தலிலாவது, தேர்தல் ஆணையம் அனுமதித்திருக்கும் தொகையை மட்டுமே செலவு செய்து, யாராவது வெற்றி பெற்றிருக்கின்றனரா என்று கேட்டால், இல்லை என்பதே பதிலாக வரும். இது, தேர்தல் ஆணையத்திற்கும் தெரியும். நம் நாட்டில் இதுவரை நடந்த தேர்தல்களில், தேர்தல் ஆணையம் அனுமதித்த அளவுக்கு குறைவாக செலவு செய்த ஒரே ஒரு வேட்பாளர் மறைந்த, டி.என்.சேஷன் தான். ஜனாதிபதி தேர்தலிலும், மற்றொரு லோக்சபா தேர்தலிலும் போட்டியிட்ட அவர், தேர்தல் ஆணையத்தின் விதியை மதித்து நடந்து கொண்டார். ஆனாலும், அவர் தோற்றுப் போனார் என்பது வேறு விஷயம்.
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும், 'போஸ்டர் செலவை வேதகிரி செய்தார்; பெட்ரோல் செலவை விருத்தகிரி செய்தார். பொதுக்கூட்டங்களுக்கு கட்சி செலவு செய்தது. 'பிட் நோட்டீஸ்'களை அருணகிரி அச்சடித்து கொடுத்தார். வேட்பாளராகிய நான், என்னுடன் பிரசாரத்துக்கு வந்தவர்களுக்கு, ரெண்டு பட்டர் பிஸ்கெட்டும், டீயும் தான், என் செலவில் வாங்கி கொடுத்தேன். அதற்கு இத்தனை ஆயிரங்கள் செலவானது' என்று தான், கணக்கு காட்டுவர். தேர்தல் ஆணையமும், அந்த தில்லாலங்கடி, 'டுபாக்கூர்' கணக்குகளை, அப்படியே மனமுவந்து ஏற்றுக் கொள்ளும்.
இந்த விஷயம், மாநில தேர்தல் அதிகாரியான சத்தியபிரதா சாஹுவுக்கு நன்றாகவே தெரியும். அதுமட்டுமின்றி, கோடிகளை கொட்டி வெற்றி பெற்ற எந்த அரசியல் கட்சி வேட்பாளரையாவது, தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்து இருக்கிறதா... செய்திருந்தால் அவர்களின் பெயர்களை வெளியிடட்டும் பார்க்கலாம். சும்மா பூச்சி காட்டாதீங்க, தேர்தல் அதிகாரி அவர்களே... உங்களின் 'எனர்ஜி' தான் வீணாகும்.
சித்தரஞ்சன் சாலை சித்தாளா காவல் துறை?
ராம்கோ - பாண்டியன், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை, விருகம்பாக்கத்தில் நடந்த, தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பேசிய, அக்கட்சியின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கவர்னர் ரவி குறித்து அசிங்கமாகவும், ஒருமையிலும், கொலை மிரட்டல் விடுத்தும் பேசியுள்ளார்.
இது குறித்து, கவர்னர் மாளிகை தரப்பில் அளிக்கப்பட்ட புகார் மனு மீது, போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் இழுத்தடித்து வருகின்றனர். சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு, எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, கைது செய்வதற்குரிய குற்றமே. அவர் மீது, இந்திய தண்டனை சட்டம், 154வது பிரிவின் கீழ், எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில், உயர் அதிகாரிகளின் அனுமதியை பெற்ற பிறகே வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பதோ, உள்துறை செயலருக்கு அனுப்பி ஒப்புதல் பெற்ற பின்னர் தான், வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதெல்லாம் சட்டத்தில் கிடையாது.
அப்படி இருக்கையில், பயங்கரவாதிகளை அனுப்பி கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த, தி.மு.க., பேச்சாளர் மீது வழக்குப் பதிவு செய்யாமல், காவல் துறையினர் வேண்டுமென்றே காலதாமதம் செய்வது, கவர்னர் மீதான, தி.மு.க., அரசின் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது.
இந்திய அரசியல் சாசனப்படி, பாதுகாப்பை யும், அதிகாரத்தையும் பெற்ற கவர்னருக்கே தமிழக காவல் துறை கடுக்காய் கொடுக்கிறது என்றால், தமிழக காவல் துறை சாமானியனுக்கானதாக எப்படி இருக்க முடியும்.
சிவாஜி மீது நடவடிக்கை எடுக்கும் விஷயத்தில், காவல் துறை நடுநிலையாக செயல்பட வேண்டும். அதைவிடுத்து, ஆளுங் கட்சிக்கு சாதகமாக, 'சித்தரஞ்சன் சாலைக்கு சித்தாளாக' மாறக்கூடாது. முதல்வர் ஸ்டாலினின் இல்லம், சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.