'நேரம் பார்த்து காய் நகர்த்துகிறார்; இதற்கு பலன் கிடைக்குமா என பார்ப்போம்...' என்று, தெலுங்கானா முதல்வரும், பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதாவைப் பற்றி கூறுகின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள்.
சந்திரசேகர ராவ், தனக்குப் பின் தன் மகன் கே.டி.ராமராவை, கட்சிக்கு தலைவராக்க முயற்சித்து, அதில், 80 சதவீத பணிகளை முடித்தும் விட்டார்.
கட்சியின் செயல் தலைவர், பஞ்சாயத்து ராஜ், தகவல் தொழில்நுட்ப துறை, நகர்ப்புற மேம்பாடு ஆகிய துறைகளுக்கான அமைச்சர் என முக்கிய பொறுப்புகள் கே.டி.ராமராவ் வசம் உள்ளன.
எப்போது வேண்டுமானாலும், முதல்வர் பதவியையும் மகனிடம் விட்டுக் கொடுக்க தயாராகி வருகிறார், சந்திரசேகர ராவ். இதனால், சந்திரசேகர ராவின் மகளும், பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் எம்.எல்.சி.,யுமான கவிதா, கடும் அதிருப்தியில் இருந்தார். தனக்கு கட்சியில் பதவி கொடுக்கும்படி தந்தையிடம் நச்சரித்து வந்தார். ஆனால், அவரது முயற்சி வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் தான், சமீபத்தில், புதுடில்லி மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் கவிதாவிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய கவிதா, 'எப்போது வேண்டுமானாலும் சி.பி.ஐ., என்னை கைது செய்யலாம். கட்சியில் முக்கியமான பொறுப்பில் இருந்தால், கைது செய்ய தயங்குவர். அதனால் பதவியை கொடுங்கள்...' என, தந்தையிடம் மீண்டும் போர்க்கொடி துாக்கியுள்ளார்.
இதனால், 'மகளுக்கு பதவி கொடுத்தால், மகனின் கோபத்தை சம்பாதிக்க வேண்டியிருக்குமே...' என கவலையில் ஆழ்ந்துள்ளார், சந்திரசேகர ராவ்.