பொள்ளாச்சி;'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த, வினாடி -- வினா போட்டியில், பொள்ளாச்சி சாந்தி நிகேதன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
பொது அறிவு மற்றும் அறிவியல் தகவல்கள், நுண்ணறிவை வளர்க்கும் விதமாக, 'தினமலர்' நாளிதழின் பட்டம் விளங்குகிறது. இது மாணவர்களின் விருப்பமான இதழாக மாறியுள்ளது. மாணவர்களின் பொது அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில், ஆண்டுதோறும், 'தினமலர்' பட்டம் இதழ் சார்பில் வினாடி -- வினா போட்டி நடத்தப்படுகிறது.
இந்த போட்டியை, 'தினமலர்' பட்டம் இதழுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமம் இணைந்து நடத்துகிறது. மேலும், ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியும் இணைந்து நடத்துகிறது.
பொள்ளாச்சி சாந்தி நிகேதன் மெட்ரிக் பள்ளியில் போட்டி நடந்தது. தகுதிச்சுற்று தேர்வில், ஆறாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரையிலான, 50 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு அணிக்கு, இருவர் வீதம், எட்டு அணியாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன.
வினாடி -- வினா போட்டி, மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்டன. இறுதியில், 'பி' அணியை சேர்ந்த மாணவர்கள் விஷ்ணு பிரபு, சதனா ஸ்மிர்த்தி ஆகியோர் முதலிடம் பெற்றனர். இவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
தகவல் பொக்கிஷம்
பள்ளி முதல்வர் ஆனந்தி கூறியதாவது:
பள்ளி மாணவர்களுக்கு 'பட்டம்' இதழ் அரிய தகவல்களின் பொக்கிஷமாக விளங்குகிறது. இன்றைய சவாலான உலகில், வெறும் புத்தக படிப்பு மட்டுமே பொதுஅறிவை வளர்க்காது. புத்தகங்களை தாண்டி, பொதுஅறிவு, நம்மை சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளை தெரிந்து கொள்ள, செய்தித்தாள் படிப்பதை பள்ளி மாணவர்கள் வழக்கமாக கடைபிடிக்கின்றனர்.
'தினமலர்' பட்டம் இதழில் பொதுஅறிவு சார்ந்த விஷயங்கள் எளிமையான தமிழில் இடம்பெற்றுள்ளதால், மாணவ, மாணவியர் ஆர்வமாக படிக்கின்றனர். இளைய தலைமுறையினரின் ஈடுஇணை இல்லாத ஒளிவிளக்கு பட்டம் இதழாகும். மேலும், பட்டம் இதழ் உயர் கல்விக்கான வழிகாட்டியாக உள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.