திருச்சி : மணப்பாறை நகராட்சி நிர்வாகம், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட 'எலக்ட்ரானிக்' பொருட்களை மிகவும் குறைந்த விலைக்கு விற்று, நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியின் அலுவலக பிரிவில், பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த கம்ப்யூட்டர்கள், சில மாதங்களுக்கு முன் மாற்றப்பட்டன.
இதையடுத்து, நல்ல முறையில் இயங்கி வந்த, 15 பழைய கம்ப்யூட்டர், 17 கீ போர்டு, 23 மவுஸ், ஏழு டாட் மேட்ரிக்ஸ், ஏழு யூ.பி.எஸ்., சர்வர், பிரின்டர், ஸ்கேனர் என, 87 பொருட்கள், எலக்ட்ரானிக் கழிவுப் பொருட்கள் எனக் கூறி, விற்பனை செய்யப்பட்டன.
திருச்சியைச் சேர்ந்த, 'மைக்ரோ இ.வேஸ்ட் ரீசைக்கிளர்ஸ்' என்ற நிறுவனத்துக்கு, அனைத்து பொருட்களும், கிலோ, 10 ரூபாய் வீதம், 4,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அவற்றின் குறைந்தபட்ச மதிப்பு, 3 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருக்கும் என, கூறப்படுகிறது.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவின் சொந்த மாவட்டத்தில், சில அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கூட்டு சேர்ந்து, மோசடியில் ஈடுபட்டிருப்பது, நகராட்சிப் பணியாளர்கள் மட்டுமின்றி, தி.மு.க.,வினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நகராட்சிப் பணியாளர்கள் கூறியதாவது:
'இ - வேஸ்ட்' என்று விற்கப்பட்ட கம்ப்யூட்டர் உள்ளிட்ட அனைத்து பொருட்களும், நல்ல முறையில் இயங்கியவை. அவற்றை, கழிவு என்று கூறி, கிலோ, 10 ரூபாய்க்கு விற்று மிகப்பெரிய மோசடி செய்துள்ளனர்.
அவற்றை 'சர்வீஸ்' செய்து, நகராட்சி பள்ளிகளுக்கு வழங்கி இருக்கலாம். இவ்வளவு குறைந்த விலைக்கு விற்று, யாரோ சிலர் லாபமடைந்து உள்ளனர்.
மக்கள் நலத்திட்டங்களுக்கு சேர வேண்டிய பணமும் மோசடி செய்யப்பட்டுள்ளது. நகராட்சி கணக்கு வழக்கை தணிக்கை செய்தால், இந்த மோசடி தெரிய வரும்.
அப்போது, அதிகாரிகள் தான் சிக்குவர்; பயனடைந்த அரசியல்வாதிகள் தப்பித்துக் கொள்வர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.