தாரமங்கலம் : காய்ச்சலுக்கு குழந்தை பலியான நிலையில், தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
சேலம் மாவட்டம், வெட்னிகரட்டைச் சேர்ந்தவர் ஈஸ்வரன், 34; தறித்தொழிலாளி. இவரது மனைவி பிரியா, 28; இவர்களின், 1 வயது மகன் திலீப். மூன்று நாட்களாக குழந்தைக்கு காய்ச்சல் இருந்தது. நேற்று முன்தினம் தாரமங்கலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
பின், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், 10 நிமிடத்தில் குழந்தை இறந்தது.
குழந்தையின் உறவினர்கள், தாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர்.
தாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் லதா கூறுகையில், ''குழந்தைக்கு அதிக காய்ச்சல், நீர்ச்சத்து குறைந்து சோர்வாக இருந்தது. பரிசோதித்த பின் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைத்தோம்,'' என்றார்.