கூடலுார், ஜன. 23-
முதுமலை அருகே வெட்டி கடத்தப்பட்ட சந்தன மரங்களை வாங்கிய கர்நாடக வியாபாரி உட்பட ஆறு பேரை, வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி சீகூர் வனப்பகுதியில் இருந்து சந்தன மரங்களை ஒரு கும்பல் வெட்டி கடத்தி உள்ளது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர், தெங்குமரஹாடா பகுதியைச் சேர்ந்த பண்டன், ஆனைகட்டியைச் சேர்ந்த பாலன், சந்திரன் ஆகியோரை, ஜன., 16ல் கைது செய்தனர்.
விசாரணையில், எட்டு பேர் சந்தன மரங்களை வெட்டி, அதன் துண்டுகளை இரு தவணையாக கர்நாடகாவுக்கு கடத்தி, அங்குள்ள வியாபாரிடம் விற்பனை செய்தது தெரியவந்தது.
இந்நிலையில், சந்தன மரங்களை வாங்கிய கர்நாடகா வியாபாரி உட்பட ஆறு பேரை, தமிழக வனத்துறையினர், கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேடி வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இந்த சம்பவம் தொடர்பாக, ஆறு பேரை தேடி வருகிறோம். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடக வனத்துறையினர் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்' என்றனர்.