செய்யாறு, ஜன. 23-
செய்யாறு அருகே சி.பி.சி.ஐ.டி., போலீஸ் போல நடித்து, ஆவின் அதிகாரியிடம், மொபைல் போன் பறித்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வெங்கட்ராயன்பேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ், 43; திருவண்ணாமலை ஆவின் அலுவலக அதிகாரி. நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
பாப்பந்தாங்கல் கூட்ரோடு அருகே, ஒரு வாலிபர் பைக்கை நிறுத்தினார். 'மோரணம் போலீஸ் ஸ்டேஷனில் சி.பி.சி.ஐ.டி., பிரிவில் போலீசாக உள்ளேன். மொபைல் போனில், 'சார்ஜ்' இல்லை. ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க, உங்கள் மொபைல்போனை கொடுங்கள்' என, கூறியுள்ளார்.
ரமேஷ் மொபைல் போனை கொடுத்துள்ளார். மொபைல் போனில் பேசிக்கொண்டே, சிறிது துாரம் நடந்து சென்று, அங்கு நிறுத்தியிருந்த பைக்கில் ஏறி தப்பினார்.
ரமேஷ் மோரணம் போலீசில் புகார் செய்தார். விசாரணையில், ஏமாற்றியது மோரணம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 30, என தெரிந்து, அவரை நேற்று கைது செய்தனர்.