திருச்சி ; திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க., வார்டு செயலர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வின், 39வது வார்டு செயலராக இருந்தவர் ரவி, 50. இவர், திருவெறும்பூர் அருகே, காட்டூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
கடந்த மாநகராட்சி தேர்தலில், 39வது வார்டில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
நேற்று முன்தினம் இரவு, அரியமங்கலத்தில் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ரவி, இரவு, நாகமங்கலத்தில் உள்ள உறவுக்கார பெண் வீட்டுக்கு சென்று, அங்கு தங்கி உள்ளார்.
நேற்று காலை, ரவிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ரவி இறந்து விட்டதாக கூறினர்.
ரவியின் மனைவி சிவகாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கணவர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, அவர், மணிகண்டம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, உறவுக்கார பெண் உள்ளிட்ட சிலரிடம் விசாரிக்கின்றனர்.