காரைக்குடி : ''தமிழக அரசியலில், மொழி அரசியலை பார்க்கிறேன். தமிழ் மொழிக்கு, மத்திய அரசு முக்கியத்துவம் தருகிறது,'' என, காரைக்குடி அழகப்பா பல்கலை பட்டமளிப்பு விழாவில், மத்திய கல்வி, திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலையில் நேற்று நடந்த, 33வது பட்டமளிப்பு விழாவில், 1,124 மாணவர்களுக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்.
இந்தியா தலைமை
துணைவேந்தர் ரவி வரவேற்றார். மத்திய கல்வி, திறன் மேம்பாட்டு அமைச்சர் தர்மேந்திர பிரதான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
தரமான பல்கலைகள் மட்டுமே எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும். கற்றல், புனித தலத்திற்கு பெயர் பெற்ற இடம் தமிழகம். பிரதமர் மோடி, காசியில் நடந்த தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில், 'தமிழ் மொழி தான் பழமையானது' என்றார்.
தமிழக தொல்லியல் துறைக்கு, அறிவியல் சான்றுகள் அதிகம் உள்ளன. அன்றைய காலத்தில் அழகப்பா பல்கலை, சென்னை ஐ.ஐ.டி., இல்லை. ஆனால், தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
தமிழ் மொழி தொன்மை, பழமை வாய்ந்தது. தமிழ் அரசியலுக்கான மொழி அல்ல. கடந்த, 2020ல் தேசிய கல்விக் கொள்கை அறிமுகம் ஆனது. அதில், அதிக புதிய விஷயங்கள் உள்ளன. 'ஜி 20' மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது.
தமிழக அரசியலில் மொழி அரசியலை பார்க்கிறேன். தமிழ் மொழிக்கு, மத்திய அரசு முக்கியத்துவம் தருகிறது. மத்திய அரசின் யு.பி.எஸ்.சி., தேர்வை, தாய்மொழியில் எழுத வாய்ப்பு தந்துள்ளோம்.
புதிய கல்வி கொள்கை
இளைஞர்களை திறன் மிக்கவர்களாக உருவாக்க வேண்டும். அதற்காகவே புதிய கல்வி கொள்கை தயாரிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர்கள் பொன்முடி, பெரியகருப்பன், உயர்கல்வி முதன்மை செயலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒரு லட்சத்து 9,615 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்.
திருச்சியில் உள்ள என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்பக்கல்லுாரியில், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத்துறை சார்பில், நேற்று லோகாஸ் தொடக்க விழா மற்றும் இணைப்பு கட்டடங்களுக்கு பூமி பூஜை நடந்தது. அதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்ட பின், கொரோனா பாதிப்பு, ரஷ்யா - உக்ரைன் போர் ஆகியன, உலக அளவில் சவாலாக இருந்தது. புதிய கல்வி கொள்கை, அந்த சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. தற்போதைய சூழலில், மாணவர்கள் புதிய சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. தமிழ் மொழி மிக அழகான மொழி. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, திருச்சி என்.ஐ.டி.,யில் படிக்கும் மாணவர்கள் அனைவரும், அவசியம் தமிழ் மொழியில் பேச, படிக்க, எழுத கற்றுக் கொள்ள வேண்டும். அது, எதிர்காலத்திற்கு பெரிய உதவியாக இருக்கும்.உலக அறிஞர்கள் பலரின் எழுத்துக்களை பற்றி படித்தாலும், எதிர்காலத்திற்கு, மனித வாழ்வுக்கு தேவையான ஞானம் திருக்குறளில் உள்ளது. மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு கள், சர்வதேச தரத்தில் அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பிள்ளையார்பட்டி கற் பக விநாயகர் கோவிலுக்கு வந்த கவர்னரை, கலெக்டர் மதுசூதன் ரெட்டி, எஸ்.பி., செல்வராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர். கோவில் சார்பில் அறங்காவலர்கள் எஸ்.தண்ணீர்மலை, எஸ்.கே.சுவாமிநாதன் தலைமையில் சிவாச்சார்யார்கள் பிச்சை குருக்கள், சோமசுந்தரம், ஸ்ரீதர் ஆகியோர் கவர்னருக்கு பூர்ண கும்ப மரியாதை அளித்தனர். தரிசனம் செய்த பின், நகரத்தார் விடுதிக்கு சென்று தேநீர் அருந்திய கவர்னர், நகரத்தாரின் ஆன்மிக பணிகளை பாராட்டினார்.