திருச்செங்கோடு: ஓமலுார் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலில் நேற்று ஆய்வு செய்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலுாரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், ஒரு பெண்ணுடன் பழகினார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
கடந்த, 2015, ஜூன், 23ல், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு இருவரும் சென்றனர். மறுநாள் பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிபாளையம் தண்டவாளம் அருகே, தலை துண்டிக்கப்பட்ட நிலையில், கோகுல்ராஜ் சடலமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக, சங்ககிரியைச் சேர்ந்த, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை என்ற அமைப்பின் நிறுவன தலைவர் யுவராஜ், அவர் தம்பி தங்கதுரை உட்பட, 17 பேரை, நாமக்கல் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதில், யுவராஜ் உட்பட, 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
தீர்ப்பை ரத்து செய்யக்கோரி, 10 பேரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
அதே சமயம், கோகுல்ராஜின் தாய் சித்ரா மற்றும் சி.பி.சி.ஐ.டி., தரப்பில், வழக்கில் இருந்து ஐந்து பேரை விடுதலை செய்ததை எதிர்த்து, மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு விசாரித்தது; முக்கிய சாட்சியான இளம்பெண் சுவாதி ஆஜரானார்.
பிறழ் சாட்சியாக மாறிய அவர், நீதிபதிகளின் கேள்விகளுக்கு, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, நீதிபதிகள் இருவரும், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டனர். தற்போது இவர்கள் தொடர்பான அமர்வு, வழக்கை தொடர்ந்து விசாரிக்கிறது.
இந்நிலையில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சென்று, 'ஸ்பாட் விசிட்' செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
போலீசார், 'சிசிடிவி' காட்சிகளை சரியாக ஆய்வு செய்யாமல் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டாலும், நீதிபதிகள் இந்த முடிவை எடுத்தனர்.
அதன்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேற்று கோவிலுக்கு வந்தனர். கோவிலில் கோகுல்ராஜ், பெண்ணுடன் அமர்ந்து பேசிய இடங்களை பார்வையிட்டனர். 'சிசிடிவி' கேமராக்களையும் ஆய்வு செய்தனர். போலீஸ் அதிகாரிகளிடமும் நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, கோகுல்ராஜ் சடலமாக மீட்கப்பட்ட, கிழக்கு தொட்டிப்பாளையம் பகுதிக்கும் சென்று ஆய்வு செய்தனர்.