சென்னை, நந்தனத்தில் நடந்த 46வது புத்தக காட்சியில், 'சங்கமும் பொதுமறையும்' எனும் தலைப்பில், புலவர் செந்துாரான் உரையாற்றினார். அவர் கூறியதாவது:
சங்க இலக்கியங்களே நம் கலாசாரம், பண்பாடு, பழக்க வழக்கங்களை உலக நாடுகளுக்கு எடுத்துரைப்பவை. ஆனால், தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றி பெரும்பாலானோர் பேசுவதே இல்லை.
திருக்குறளிலும், சங்க இலக்கியங்களின் பல கருத்துகள் எடுத்தாளப்பட்டுள்ளன. கண்ணதாசன் உள்ளிட்ட பலர், சங்க இலக்கியப் பாடல்களை திரையிசைப் பாடல்களாக மாற்றி உள்ளனர்.
மனித உறவுகளே மிகப் பெரிய சொத்து. அந்த சொத்தை யார் அதிகமாக சேர்க்கிறாரோ அவரே உயர்ந்தவர்.
இதை வலியுறுத்தி 'உண்பது நாழி, உடுப்பவை இரண்டு' என்றுரைத்து, 'செல்வத்துப் பயனே ஈதல்' என, நக்கீரனார் இயற்றிய புறநானுாற்று பாடலை, 'கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின்' என எழுதினார் வள்ளுவர். இது போன்று, பல சங்க இலக்கியப் பாடல்களை பயன்படுத்தியிருக்கிறார் வள்ளுவர்.
சங்க காலத்தில் கணியன் பூங்குன்றனார் கூறிய 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' ஐ.நா., சபையில் பொறிக்கப்பட்டுள்ளது.
இப்போதிருக்கிற தலைமுறையினருக்கு தமிழின் இலக்கிய வளமை பற்றி தெரியவில்லை. திருக்குறளுக்கும் முந்தைய சங்க இலக்கியங்களை இன்றைய இளைஞர்களுக்கும் அறிமுகப்படுத்துவது நம் கடமையாக இருக்க வேண்டும்.