தேனி: 'ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துடன் எங்களை ஒப்பிடுவது அவமானம். யானையுடன் எலியை ஒப்பிடுவது போன்றதாகும்,' என, தேனியில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார்.
இன்று கம்பத்திற்கு முன்னாள் முதல்வர் பழனிசாமி வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், உதயகுமார், கருப்பணன் ஆய்வு செய்தனர்.
பின் சீனிவாசன் கூறியதாவது: திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர்., வெற்றி பெற்றது போல் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெறுவோம். எங்களுடன் 99.5 சதவீதம் தொண்டர்கள் உள்ளனர். உண்மையான அ.தி.மு.க., நாங்கள் தான். சின்னம் எங்களிடம் உள்ளது. சுப்ரீம் கோர்டில் நல்ல தீர்ப்பு வரும். ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தி.மு.க., அரசை எதிர்த்து பழனிசாமி தலைமையில் பல போராட்டங்கள் நடத்தி உள்ளோம். பன்னீர்செல்வம் எந்த போராட்டமும் நடத்தவில்லை. அ.தி.மு.க., மக்களை மட்டும் நம்பியுள்ள கட்சி. இந்த 20 மாதங்களில் உயர்ந்துள்ள விலைவாசி, ஆட்சியின் அவலங்களை கூறி ஓட்டு கேட்போம் என்றார்.