புதுக்கோட்டை: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, புதுக்கோட்டையில், 2018ம் ஆண்டு, 'கஜா' புயலில் சேதமடைந்த தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த ஊர் பெயர் பலகைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல், குடுமியான்மலை, திருமயம் கோட்டை, ஆவுடையார்கோவில், பொற்பனைகோட்டை, திருவரங்குளம் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு, சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
அதே போல, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி உட்பட இதர பகுதிகளுக்கும் பலர் வந்து செல்கின்றனர்.
வாகன ஓட்டிகளின் வசதிக்காக, புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், வளைவு அமைத்து, பச்சை வண்ணத்தில் ஊர் பெயருடன் வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.
அதில், ஊர் பெயர், இருக்கும் திசை மற்றும் அங்கிருந்து ஊருக்கான துாரம் எழுதப்பட்டிருந்தது.
கடந்த, 2018ம் ஆண்டு, கஜா புயல் காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையோரம் இருந்த மரங்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பெயர் பலகைகள் சேதமடைந்தன.
கீரனுார், நமணசமுத்திரம் உட்பட சில பகுதியில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்ட ஊர் பெயர் பலகைகள் சேதமடைந்தன.
இதனால், வெளியூர் பயணியர், சுற்றுலா பயணியர், வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், புதுக்கோட்டையில் இருந்து எந்த ஊருக்கு எப்படி செல்வது என்று தெரியாமல் சிரமப்பட்டனர்.
இது குறித்த செய்தி, நம் நாளிதழில் கடந்த அக்டோபரில் வெளியானது. அதன் எதிரொலியாக தற்போது, புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் சேதமடைந்த அனைத்து ஊர் பெயர் பலகைகளையும் நெடுஞ்சாலையினர் சீரமைத்து உள்ளனர்.