பொள்ளாச்சி:பொள்ளாச்சி கோட்டத்துக்குட்பட்ட, நெடுஞ்சாலைத்துறை ரோடுகளில் சேதமடைந்தவற்றை சீரமைக்கவும், ஒரு வழிப்பாதையை இருவழிப்பாதையாக விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.தமிழகம் - -கேரளாவை இணைக்கும் முக்கிய ரோடுகளாக உள்ளன.
இதில், கிராமங்களில் உள்ள ரோடுகள், கோட்டத்தில் உள்ள பிரதான ரோடுகளில் வாகன போக்குவரத்து அதிகமுள்ளது. வாகன போக்குவரத்துக்கு ஏற்ப, கிராம ரோடுகளில் உள்ள, தரைப்பாலங்களை அகற்றி, உயர்மட்ட பாலங்கள் கட்டுவது, ரோடுகளை அகலப்படுத்துவது உட்பட பல்வேறு பணிகள், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கிராமங்களில் சேதமடைந்துள்ள ரோடுகளை சீரமைப்பது, தேவைப்படும் இடங்களில் ரோடுகளை, இருவழிப்பாதையாக விரிவுபடுத்தி மேம்படுத்தும் பணிகள் நடக்க உள்ளன.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
2022 - 23ம் நிதியாண்டில், கிணத்துக்கடவு உட்கோட்டத்தில், வடசித்துார்- -- செட்டிபாளையம் ரோடு, குறுகலாக உள்ளதால், அது, 5.32 கோடி ரூபாயில், 4.9 கி.மீ., துாரம் இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.
பெரியகுயிலி- -- செட்டிபாளையம் ரோடும், 3.2 கி.மீ., நீளத்துக்கு, 4.75 கோடி ரூபாய் மதிப்பில், இருவழித்தடமாக மாற்றப்படுகிறது.
பொள்ளாச்சி- -- கொச்சின் சாலையில், கிணத்துக்கடவு பகுதிக்கு உட்பட்ட, 1.9 கி.மீ., துார இடைவெளி பகுதி, 5.25 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படுகிறது.
காட்டம்பட்டி- -- கொடுவாய் ரோட்டில் இருந்து, ஜே.கிருஷ்ணாபுரம் வரையிலான, 4.6 கி.மீ., ரோடு, 4.75 கோடி ரூபாய் மதிப்பில், இருவழிப்பாதையாக விரிவுபடுத்தப்படுகிறது.
செஞ்சேரிபுத்துார் --- பச்சாகவுண்டன்பாளையம் வரையிலான, 3 கி.மீ., ரோடு, 2.9 கோடி ரூபாய் மதிப்பில், இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.
பொள்ளாச்சி உட்கோட்டத்தில், நடுப்புணி --- சி.கோபாலபுரம் வரையிலான, ஒரு கி.மீ., துாரமுள்ள ரோடு, 1.05 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது. லட்சுமாபுரம் ---- மாமரத்துப்பட்டி வரையிலான, 5 கி.மீ., ரோடு, 4 கோடி ரூபாய் மதிப்பிலும்; சமத்துார், தேவனுார்புதுாரில் இருந்து மாமரத்துப்பட்டி வரை, 1.83 கி.மீ., துாரமுள்ள ரோடு, 2.30 கோடி ரூபாய் மதிப்பிலும் புதுப்பிக்கப்படுகிறது.
வால்பாறை உட்கோட்டத்தில், ஆழியார் சோதனைச்சாவடி - இரண்டாவது கொண்டை ஊசிவளைவு, ஐயர்பாடி தபால் நிலையம் ---- ரொட்டிக்கடை வரை, ரொட்டிக்கடை -- பாரளை -- ஸ்டேன்மோர் மாதா கோவில் சந்திப்பு வரையான ரோடுகளும் புதுப்பிக்கப்பட உள்ளன.
இந்த உட்கோட்டத்தில், 21 கோடி ரூபாய் மதிப்பில், 15 கி.மீ., துாரத்துக்கு ரோடு அமைக்கும் பணிகள் நடக்க உள்ளன.
இதேபோல், ஆனைமலை உட்கோட்டத்தில், பொள்ளாச்சி- -- வால்பாறை ரோட்டில், வாகீஸ்வரி பள்ளியில் இருந்து கரியாஞ்செட்டிபாளையம் பிரிவு வரை, 2.6 கி.மீ., துாரமுள்ள ரோடு, 6.7 கோடி ரூபாயில் விரிவுபடுத்தப்படுகிறது.
பொள்ளாச்சி --- கொச்சின் ரோட்டில், வாழைக்கொம்புநாகூர்-- -- இருட்டுப்பள்ளம் வரையிலான, ஒரு கி.மீ., துார ரோடு, 2.9 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படுகிறது. ஆனைமலை - - பூலாங்கிணறு ரோட்டில், பாறைமடையூர் ---- ரெட்டியார்மடம் வரை, 5.2 கி.மீ., துாரமுள்ள ரோடு, 6 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படுகிறது. கோட்டூர், அன்னபாறை -- தெய்வகுளம் காளியம்மன்கோவில் வரையிலான ரோடு, இருவழிப்பாதையாக, 1.6 கி.மீ., வரை மாற்றப்பட்டு, 1.8 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படுகிறது.ஒட்டுமொத்தமாக, 68.72 கோடி ரூபாய் மதிப்பில், 50.83 கி.மீ., துாரத்துக்கு கிராம ரோடுகள் மற்றும் பிரதான ரோடுகள் புதுப்பிக்கப்படுகின்றன. கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே நடக்கும், உயர்மட்ட பாலங்கள் கட்டும் பணிகளுடன், இந்த பணிகளையும், துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டுக்கான, இந்த பணிகள் முடிந்ததும், வரும் நிதியாண்டில் கூடுதல் நிதி பெற்று, ரோடுகளை புதுப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.