சென்னை:பிறவி சிறுநீர் பாதை கோளாறால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனுக்கு, காவேரி மருத்துவமனையில் நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனரும், செயல் இயக்குனருமான அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
மியான்மர் நாட்டைச் சேர்ந்த சிறுவனுக்கு, அடிவயிற்றில் வலப்பக்கத்தில் ஏற்பட்ட வலி காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
பரிசோதனையில், சிறுநீரகத்தில் இருந்து, சிறுநீர் பைக்கு, சிறுநீர் எடுத்து செல்லும் குழாய் வீங்கி பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. பிறவிக்கோளாறான இது, 'மெகாயூரிட்டர்' என்ற பருத்த சிறுநீர்க்குழாய் பாதிப்பாகும்.
இந்த பாதிப்பால் சிறுநீர் பையில் இருந்து சிறுநீர் திரும்பி பின்னோக்கி வருவதால், அக்குழாய் மேலும் வீக்கமடைந்து, சிறுநீர் போக்கில் தடையை விளைவித்தது.
தொடர்ந்து, சிறுநீர் பாதையியல் துறையின் மூத்த டாக்டர் ஜீவகன் தலைமையில், வீங்கி விரிவடைந்திருந்த சிறுநீர்க் குழாயை, அதன் இயல்பான அளவிற்கு குறைத்து, ஆரோக்கியமான அமைவிடத்தில் சிறுநீர் பையுடன் குழாயை இணைக்க, அறுவை சிகிச்சை மேற்கொண்டோம். அதன் பயனாக, அச்சிறுவன் குணடைந்துள்ளான்.
இவ்வாறு அவர் கூறினார்.