பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ரயில்வே ஸ்டேஷனுக்கு ஆழியாறு ஆற்றில் இருந்து, குடிநீர் கொண்டு வரும் குழாய்களை சீரமைப்பதற்கான டெண்டரை இறுதி செய்யும் பணிகள், தீவிரமாக நடந்து வருகிறது.
பொள்ளாச்சி சந்தையின் முக்கியத்துவம் கருதி, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், 1915ம் ஆண்டு பொள்ளாச்சியில் பயணியர் ரயில் சேவை துவங்கப்பட்டது. அதன்பின், 1932ல், பொள்ளாச்சி --- பாலக்காடு இடையே ரயில் சேவை துவங்கப்பட்டது.
அப்போது, நீராவி இன்ஜினில் இயங்கும் ரயில்களை இயக்கவும், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் குடியிருப்புகளின் பராமரிப்புக்கும், அம்பராம்பாளையத்தில், ஆற்றில் இருந்து, தண்ணீர் எடுக்க தனியாக, பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டது.
ஆற்றில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் வரை, 16 இன்ச் அளவுள்ள குழாய்கள், 7.2 கி.மீ., துாரத்துக்கு அமைக்கப்பட்டன. 2008ல் மீட்டர்கேஜ் பாதைகளை, அகல ரயில் பாதைகளாக மாற்றும் பணிகள் துவங்கியபோது, ரயில்வே நிர்வாகம், தண்டவாளங்களுடன் சேர்த்து, தண்ணீர் குழாய்களையும் அகற்றியது.
இதனால், நகராட்சி நிர்வாகத்தை சார்ந்திருக்காமல், சுய சார்பு முறையில் ஆழியாறு ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, சுத்திகரித்து பயன்படுத்திய கட்டமைப்புகள் வீணானது.
அதன்பின், சில ஆண்டுகள் பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் தண்ணீர் வழங்கி வந்த நிலையில், நகராட்சிக்கும், ரயில்வே நிர்வாகத்துக்கும் இடையே, ஏற்பட்ட பிரச்னை காரணமாக, குடிநீர் வழங்குவது கைவிடப்பட்டது.
அதனால், ரயில்வே நிர்வாகமே, ஸ்டேஷன் வளாகத்தில் இருந்த, கிணற்றை சீரமைத்து, தேவையான தண்ணீரை எடுத்து வருகிறது. இதனால், ரயில்வே ஸ்டேஷனில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதில்லை.
இதனால், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட, பம்பிங் ஸ்டேஷன் மற்றும் குழாய்களை சீரமைக்க கோரி, ரயில்வே ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்காக, 76.6 லட்சம் ரூபாய் செலவில் பணிகளை மேற்கொள்ள, தெற்கு ரயில்வே நிதி ஒதுக்கியது. இப்பணிக்கான, டெண்டர் டிச., 5ம் தேதி நடந்தது. இதில், இரண்டு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
டெண்டரை இறுதி செய்யும் பணிகள், தீவிரமாக நடந்து வருவதாகவும், மார்ச் மாதத்துக்குள் அவை முடிந்து, அடுத்த ஆறு மாதத்துக்குள், குழாய் சீரமைக்கும் பணிகள், நிறைவு செய்யப்படும் என, பாலக்காடு கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.