சென்னை:இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்புவில் இருந்து, இண்டிகோ விமானம் நேற்று சென்னை வந்தது. அதில் வரும் இலங்கையைச் சேர்ந்த இரண்டு பெண் பயணியர் தங்கம் கடத்தி வருவதாக, சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சந்தேகம் அளிக்கும் வகையில், விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற இரண்டு பெண்களை, சுங்க அதிகாரிகள் இடைமறித்து சோதனை செய்தனர்.
அதில், தங்கப் பசை அடங்கிய நான்கு பொட்டலங்களை, உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றி மதிப்பிட்டதில், 859 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதே போல, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில் இருந்து 'எமிரேட்ஸ்' விமானத்தில் வந்த பயணி ஒருவரை, அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தங்கப் பசை அடங்கிய இரண்டு பொட்டலங்களை, ஆசனவாயில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை கைப்பற்றி மதிப்பிட்டதில், 378 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. மொத்தம், 66.21 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1,326 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.