உடுமலை:தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில், தேர்தல் பிரிவு சார்பில், விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டது.
உடுமலை தாலுகா அலுவலக வளாகத்தில், விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டுள்ளது. மடத்துக்குளம் தாலுகா அலுவலக தேர்தல் பிரிவு சார்பில், நால்ரோடு, காரத்தொழுவு, எஸ்.வி., புரம் உள்ளிட்ட இடங்களில், தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகள் கூறியதாவது:
இந்திய தேர்தல் கமிஷன் அறிவுரைப்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வருகிறது.
பொதுமக்கள், ஓட்டுச்சாவடி மையங்களிலும், அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில், பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அரசின் பிற துறைகளில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களை தொடர்பு கொண்டு, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம்.
மேலும், வீடுதோறும் சென்று ஆதார் எண் இணைப்பு செய்யும் பணியில், ஈடுபட்டுள்ள ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம், வாக்காளர் அடையாள அட்டை, மற்றும் ஆதார் எண் விபரங்களை தெரிவிக்கலாம். இவ்வாறு, தெரிவித்தனர்.