சென்னை:சென்னை, ஏழுகிணறு குமரப்பன் தெருவைச் சேர்ந்தவர் இந்திராணி, 80; பழ வியாபாரி. இவர், 2016 ஜூன் 30ல், பழ வியாபாரத்தை முடித்து, கடையை பூட்டினார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ராமசந்திரன், 49, என்பவர், இந்திராணியிடம் தகராறு செய்து, அவரை கீழே தள்ளினார்.
தவிர, இந்திராணிக்கு உதவியாக வந்த இரு பெண்களை அடித்து, அவர்களின் ஆடைகளை இழுத்து மானபங்கப்படுத்தினார்.
இந்திராணி புகாரின்படி, கொத்தவால் சாவடி போலீசார், ராமச்சந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு, ஜார்ஜ் டவுண் எட்டாவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயசுதா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'குற்றம் சாட்டப்பட்டவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கத்தியைக் காட்டி 'மாமூல்' கேட்டு தரவில்லை என்பதால், பழ விற்பனையில் ஈடுபட்டவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து உள்ளார்.
பாதிக்கப்பட்டோர் பலமுறை புகார் அளித்து உள்ளனர். உதவிக்கு வந்த பெண்களின் மேலாடையைக் கிழித்து, ராமச்சந்திரன் மானபங்கப்படுத்தியுள்ளார்' என, அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
குற்றச்சாட்டுகள், சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. சாட்சிகளும் தெளிவாக சாட்சியம் அளித்து உள்ளனர்.
எனவே அவருக்கு, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.